நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்த படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த கோப்ரா படத்தில் விக்ரம் 9 விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார். 






பெரும் பொருட்செலவில் இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்த நிலையில்  படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. 2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில்  கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியானது. முதல் நாள் படம் பார்த்த ரசிகர்கள்  3 மணி நேரம் கோப்ரா படம் ஓடுவதால் சலிப்பு ஏற்பட்டதாக விமர்சனத்தை முன் வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு 20 நிமிட காட்சிகளை நீக்கியது. 






மேலும் படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனம் அதிகமாக எழுந்ததால் வசூல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டது. கோப்ரா படத்தின் ப்ரோமோஷனுக்காக பல இடங்களுக்கு படக்குழுவினர் சென்ற போது அது எதுவும் படம் வெற்றிப் பெற உதவவில்லை. இதனால் விக்ரமின் தோல்விப் படங்களின் வரிசையில் கோப்ராவும் இணைந்தது. இதனால் தற்போது விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 


இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  SonyLIV தளத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.