ஆரணி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை 3 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் வயது (27). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர் அதே கிராமத்தில் டியூஷன் நடத்தி வந்தார். இவர், கடந்த ( 8.11.2018 ) அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். உறவினர் முறையில் இவர் அந்த சிறுமிக்கு சித்தப்பா என்பதால், எந்த தயக்கமும் இல்லாமல் சிறுமி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, மகேந்திரன் வீட்டில் யாரும் இல்லாததை, பயண்படுத்திக்கொண்ட மகேந்திரன் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த சிறுமி அழுது துடித்துள்ளார்.


 




அதனைத்தொடர்ந்து, சிறுமியிடம் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னை கழுத்தை நெரித்து கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி அழுது கொண்டே தனது வீட்டுக்கு சென்றுள்ளார் அப்போது சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். பின்னர் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை அழுதபடியே பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சித்தப்பா உறவு முறையுள்ள ஒருவரே இந்த கொடூரத்தில் ஈடுபட்டதை அறிந்த பெற்றோருக்கு அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின், அடிப்படையில் காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.


 




தொடர்ந்து நடத்திய விசாரணையில், டியூஷனுக்கு வரும் மாணவிகள் சிலரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்தது. மேலும் அவரை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படுவரும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் எஸ்.மைதிலி ஆஜரானார்.வழக்கை விசாரணை செய்த நீதிபதி பெ.பார்த்தசாரதி, தீர்ப்பு அளித்தார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்துக்காக, வாலிபர் மகேந்திரனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பை அளித்தார்.அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த மகேந்திரனை காவல்துறையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 போக்சோ வழக்குகளில் முதியவர், வாலிபருக்கு என தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.