சம்பந்திக்கும், சம்பந்தியோட சம்பதிக்கு கான்ட்ராக் எடுத்துக் கொடுத்து நீதிமன்றங்களில் ஏறி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக குடும்ப கட்சி என பேச என்ன தகுதி இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 


நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை கூட்டத்தை திமுக தலைமை கழகம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


அதில், “பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்து பச்சை பொய்யில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதிமுக திட்டத்தை திமுக செயல்படுத்துவதாக எதிர்கட்சி தலைவர் பேசுகிறார். ஆனால், மகளிர் உரிமை தொகை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்மை காக்க 48, இல்லம் தேடி திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் இதெல்லாம் அதிமுக கொண்டு வந்த திட்டமா...?


வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறதே, இது அதிமுக கொண்டுவரப்பட்ட திட்டமா...? ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால் ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோமே இதெல்லாம் தரையில் தவழ்ந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையா...?


எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எல்லா துறைகளிலும் முதலிடம் பிடித்தது என பேசிகிறாரே... அவர்களின் காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாஜகவில் அடமானம் வைக்கப்பட்டது. சாத்தான் குளம் சம்பவம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என அதிமுக ஆட்சியில் நடந்த ஒவ்வொரு சம்பவங்கள் இன்னும் மக்களிடம் இருந்து மறையவில்லை. 


திமுக குடும்ப கட்சி என்றார்கள். ஆமாம், அழுத்தமாக கூறுகின்றேன் திமுக குடும்ப கட்சி தான். கோடிக்கணக்கான குடும்பகளை கொண்டுள்ளதால் திமுக குடும்ப கட்சிதான். சம்பந்திக்கும், சம்பந்தியோட சம்பதிக்கு கான்ட்ராக் கொடுத்து நீதிமன்றங்களில் ஏறி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக குடும்ப கட்சி என பேச என்ன தகுதி இருக்கிறது.


பாஜகவுடன் இணைந்திருந்தால் டெபாசிட் போய்விடும் என்பதால் பாஜகவில் இருந்து விலகியதாக எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் சட்டம் என எல்லா வற்றுக்கும் கண்களை மூடி கொண்டு ஆதரித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. தற்போது கூட்டணி தர்மம் என பேசி கொண்டு நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுகிறார்” என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.