பத்திரிகையாளர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ஜெய் பீம். இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவிருக்கிறது. நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை முதலமைச்சரிடம் நடிகர் சூர்யா வழங்கினார்.
இந்நிலையில், படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “ கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் ஏராளமாக வரவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.
இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா அவர்கள் வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அளைவரும் செய்ய வேண்டும்.
'ஜெய்பீம்' படம் பார்க்க நான் சென்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களைச் சந்தித்தேன். நீதியரசர் என்று யாரையும் சொல்லக் கூடாது என்று சொல்பவர் அவர், ஆனாலும் எங்களுக்கு அவர் நீதியரசர்தான். அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார்கள். மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த
விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது. காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை 'சிறை டைரி'யாக சிட்டிபாபு அவர்கள் எழுதி உள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று 'ஜெய்பீம்' பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது.
இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான ஜெய்பீம்' படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்