நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தை அவரது அப்பாவும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்த்து பாராட்டியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தனது 3வது படமாக ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், முக்கிய கேரக்டர்களில் வடிவேலு,ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.
பாராட்டி தள்ளிய பிரபலங்கள்
இதனிடையே மாமன்னன் படத்தை பார்த்த நடிகர் தனுஷ், ”மாரி செல்வராஜின் மாமன்னன் படம் பார்த்தேன். நெகிழ்ச்சியாக உள்ளது. மாரியை கட்டியணைத்து பாராட்டுகிறேன். வடிவேலு மற்றும் உதயநிதி தரமான நடிப்பை வழங்கியுள்ளனர். அதேபோல் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபஹத் ஃபாசில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இடைவேளை காட்சியில் தியேட்டர்கள் தெறிக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகு” என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டியிருந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என கூறியிருந்தார். இதனால் மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
மாமன்னன் படம் பார்த்த முதலமைச்சர்
இந்நிலையில் மாமன்னன் படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அப்பாவும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், ”மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.