சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஒரு சேனலாக விளங்குவது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. மக்கள் விரும்பும் வகையில் எண்ணற்ற புதுமையான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அவர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை. அந்த வகையில் பேச்சு திறமை கொண்டவர்களுக்காக 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் இந்த நிகழ்ச்சி புது பொலிவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 


 



தமிழின் பெருமையையும் தமிழனின் அருமையையும் உணர்த்தும் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே புரோமோ மூலம் துவக்கி வைத்தார். அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த  நர்மதா என்ற பெண்மணி "இட ஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைத்து பாராட்டுகளை குவித்தது. அவர் பேசிய தொகுப்பு சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது.  இது மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு  எடுத்து செல்லப்பட்டதை அடுத்து அவர் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் அந்த பெண்மணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


நர்மதாவின் வீடியோவை பகிர்ந்து 'சொற்களுக்கு உயிர் இருக்கிறது. பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளை பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பது தான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன் என வாழ்த்தினேன்.


எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!" என வாழ்த்தியுள்ளார்.