தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேனாண்டாள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில், எங்களின் சங்கமித்ரா படத்தின் பெயரில் உலாவரும் தகவல்கள் பற்றிய விளக்க அறிக்கை, "சில நபர்கள் சங்கமித்ரா படத்துடன் தொடர்பு இருப்பவர்கள் போல் பொய்யாக ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அதற்கும் தேனாண்டாள் நிறுவனத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை அப்படிப்பட்ட நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்த சட்டவிரோத செயலால் ஏற்படும் இழப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல" என அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
மெர்சல் நிறுவனமே மெர்சலானது:
விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் அடுத்து மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் சங்கமித்ரா என்ற படத்தை தயாரிக்க இருந்தது.
சுந்தர் சி இயக்க இருந்த அந்த படம் அறிவிப்போடு நின்றுபோனது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தப் படத்துக்காக குதிரையேற்றம், வாள் சண்டை போன்றவற்றை தனி பயிற்சியாளர் வைத்து கற்றுக் கொண்டார் ஸ்ருதி ஹாசன். ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் தொடங்குவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே, ஸ்ருதி ஹாசன் படத்தில் இருந்து விலக, அவருக்குப் பதிலாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனாலும், அறிவிப்பு வெளியாகி ஒரு வருடமாகியும் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.
இந்நிலையில் சங்கமித்ரா பெயரை வைத்து மோசடி நடப்பதால் மெர்சல் நிறுவனமே மெர்சலாகியுள்ளது.
சுந்தர் சி.,யின் கனவுப் படம்:
சுந்தர் சி ஒரு பேட்டியில் "என்றைக்கு அந்தப் படம் வந்தாலும், தமிழ் சினிமாவின் அடையாளம் சொல்லும் படமாக இருக்கும். ‘சங்கமித்ரா’ படத்துக்குப் பிறகு இயக்கத்தையே விட்டுவிடலாம் என்ற நினைப்பில் இருந்தேன்" என்று கூறியிருந்தார். அது அந்தளவுக்கு அவருடைய கனவுப் படமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதனால் எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் தேனாண்டாள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.