நடிகை பிரியங்கா சோப்ரா ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு கோடிகளில் சம்பளம் பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.


பிரியங்கா சோப்ரா:


பாலின பாகுபாடு தொடர்பான புகார்கள் தொடர்ந்து சினிமாத்துறையில் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில் பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் சென்று கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் பெற்று விதிகளை உடைத்துள்ளார்.


பிரியங்கா சோப்ரா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. வெள்ளிக்கிழமை தோறும் புது புது எபிசோட்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், வரும் மே 26ஆம் தேதியுடன் இந்த சீரிஸ் நிறைவடைய உள்ளது. 


சம்பளம் எவ்வளவு?


ஸ்பை உலகை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடரில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் ரிச்சர்ட் மெய்டன் உடன் பிரியங்கா சோப்ரா இணைந்து உளவாளியாக நடித்துள்ளார். சிட்டாடெல், த ஃபேமிலி மேன் புகழ் இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே இத்தொடரை இயக்கி உள்ளனர். நடிகை சமந்தா, நடிகர் வருண் தவான் இருவரும் இணைந்து இத்தொடரின் தமிழ் பதிப்பில் நடிக்க உள்ளனர்.


250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சீட்டடெல் சீரிஸ், 25 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பொருட் செலவில் வெளியான ரிங்ஸ் ஆஃப் பவர் தொடருக்குப் பிறகு நல்ல வரவேற்பைப் பெற்ற தொடராக சீட்டடெல் உருவெடுத்துள்ளது.


இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா இத்தொடரில் சுமார் 10 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின்படி 80 கோடிகள் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஹீரோவுக்கு இணையான சம்பளம்:


பாலிவுட்டில் அதிகபட்சமாக நடிகை தீபிகா படுகோன் 22 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். பாலிவுட்டில் நடிகர் சல்மான் லாபப் பங்குடன் சேர்த்து 100 கோடிகளுக்கும் மேல் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. பாலிவுட், கோலிவுட் என சினிமா சந்தை ஹீரோக்களை மையப்படுத்தியே செயல்பட்டு வரும் நிலையில், ஹீரோயின்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சர்வதேச அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரியங்காவுக்கு, இத்தொடரின் நடிகர் ரிச்சர்ட் மெய்டனுக்கு இணையாக 80 கோடிகள் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹீரோவுக்கு இணையாக பிரியங்கா சோப்ரா சம்பளம் பெற்ற முதல் சினிமா அல்லது தொலைக்காட்சித் தொடர் இதுதான் எனவும் தெரிவித்துள்ளார். 


சமந்தா - வருண் தவான் நடிக்கும் சிட்டாடெல் தொடரின், இந்தியப் பதிப்பைப் போல, இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் மெக்ஸிகோ பதிப்புகள் தனித்தனியாக வரவுள்ள நிலையில், ப்ரைம் நிறுவனம் இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.