திரைப்பட ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தான் புதிதாக வாங்கிய காரின் முன் அமர்ந்து பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான கே.வி. ஆனந்திடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரிச்சர்ட் எம்.நாதன், வசந்தபாலன் இயக்கிய “அங்காடி தெரு” படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படத்தில் நெரிசலான ரங்கநாதன் தெருவில் படமாக்கிய விதம் உள்ளிட்ட பல காரணங்களால் தனது குருநாதரான கே.வி.ஆனந்த் இயக்கிய “கோ” படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 


இதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, மத கஜ ராஜா, சமர், வணக்கம் சென்னை, நான் சிகப்பு மனிதன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, அப்பா, கத்திச்சண்டை, தொண்டன், இப்படை வெல்லும், காளி, மிஸ்டர் சந்திரமௌலி, திமிரு புடிச்சவன், கோமாளி, மாநாடு, என்ன சொல்ல போகிறாய், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள “பொம்மை” படத்துக்கும் அவர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 


இப்படியான நிலையில் அவர், கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஆசையாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி 700 மாடல் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் ரிப்பன் கூட அதிலிருந்து எடுக்கப்படாத நிலையில், ரிச்சர் எம்.நாதன் அதே காரால் வீதிக்கு வந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தொல் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “15 மாத காத்திருப்புக்கு பின் ஜூன் 1 ஆம் தேதி இந்த காரை வாங்கினேன். ஜூன் 2 ஆம் தேதி வாகன பதிவுக்குப் பிறகு 5 ஆம் தேதி காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன். அந்த கார் சென்னையின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் அருகே பழுதாகி நின்றது. 


உடனடியாக கார் சர்வீஸ் ஊழியர்களை தொடர்பு கொண்டால் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. அவர்கள் போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு இந்த கார் வேண்டாம். நான் செலுத்திய பணம் எனக்கு வேண்டும். வெறும் 3 நாட்களிலேயே கார் பழுதாகி விட்ட நிலையில், இது வேலை செய்யும் என்பதற்கு என்ன கியாரண்டி?  என மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து கேள்வியெழுப்பியிருந்தார். ரிச்சர்ட்டின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க: Thandatti Trailer: திருட்டை சொல்லி மிரட்டிய இயக்குநர்.. மிரண்டுபோன பாட்டி... ‘தண்டட்டி’ படம் உருவான கதை தெரியுமா?