சஞ்சய் லீலா பன்சாலி


பாலிவுட் இயக்குநர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது படங்கள் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளை மையப்படுத்தியே இருக்கும் தன்னுடையப் படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி அவற்றுக்கு தானே இசையமைப்பது என பல்வேறு வகைகளில் தன்னுடையப் படங்களை தனித்துவமானதாக மாற்றுவதில் கெட்டிக்காரர். பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா , ஆலியா நடித்து அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்த கங்குபாய் கத்தியவாடி உள்ளிட்ட படங்கள் சஞ்சய் லீலா பன்சாலியின் புகழ்பெற்றப் படங்கள்.


ராம்லீலா


கடந்த 2013-ஆம் ஆண்டு அவர் இயக்கிய ராம் லீலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தீபிகா படூகோன் ரன்வீர் சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ரோமியோ ஜூலியட் கதையை பின்னணியில் வைத்து கமர்ஷியல் கூறுகள் கலந்த  ஒரு படமாக இயக்கியிருந்தார்.  இந்தி மட்டும் இல்லாமல் தமிழ் உட்பட பல மொழி சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் ராம்லீலா. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் தீபீகா மற்றும் ரன்வீர் சிங் ஆகிய இருவரும் காதல் வயப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்






ராம்லீலா படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரபல தமிழ் ஒளிப்பதிவாளரான ரவி வர்மன், இன்று இந்தப் படம் குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ ராம் லீலா' வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன, பர்ஃபிக்குப் பிறகு, இந்தத் படம் எனக்கு  மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது, அந்த சவாலை நான் ரசித்து ஏற்றுக் கொண்டேன்.


ஒவ்வொரு  ஃபிரேமையும் உயிர்ப்புள்ள ஒரு   ஓவியமாக மாற்ற, பலவகை கவர்ச்சிகரமான வண்ணங்களை பயண்படுத்தினேன் . ரன்வீர் மற்றும் தீபிகா இடையே திரையில் இருக்கும் கெமிஸ்ட்ரி, திரையிலும் மற்றும் திரைக்கு வெளியேயும் அவர்களது பந்தம் செழித்திருப்பதை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இயக்குநர் எனக்கு அதிகப்படியான படைப்பு சுதந்திரத்தை வழங்கினார். ஆக்கப்பூர்வமான ஒரு உரையாடலுக்கு எங்களுக்கு இடையில் மொழி ஒரு தடையாக இருந்தாலும்  நான் ஒவ்வொரு காட்சியை லைட் செய்வதை பார்த்து எனக்கு தன்னுடைய ஆலோசனையை வழங்குவார் அவர். மொழி பிரச்சனைக் கடந்து கலையின் மூலம் ஒரு மேஜிக்கை உருவாக்கும் ஒரு சிறப்பான அனுபவமாக எனக்கு இந்தப் படம் இருந்தது” என்று அவர் கூறியுள்ளார்.