ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் மறைந்த தனது மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
பி.சி ஸ்ரீராம்
தமிழ் சினிமா இதுவரையில் எத்தனையோ ஒளிப்பதிவாளர்களைக் கண்டுள்ளது. ஆனால் ஒருவரின் பெயர் மட்டும் என்றுமே உச்சத்தில் இருக்கும். அவர் தான் ஐகானிக் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். அவர் இதுவரையில் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் காட்சிக்கு காட்சி மாயாஜாலம் செய்ய கூடியவர். இவரின் திரைப்பயணத்தில் ஒரு கேரியர் பிரேக்கிங் படமாக அமைந்தது 'மௌன ராகம்' திரைப்படம். இவருக்கு மட்டும் அல்ல இயக்குனர் மணிரத்னத்திற்கும் அந்த திரைப்படம் தான் ஒரு முக்கிய படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மணிரத்னத்துடன் இணைந்து இவர் பணியாற்றிய படங்கள் அனைத்துமே இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனைகள்.
மகளை இழந்த தந்தை
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பி.சி.ஸ்ரீராம் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது மகள் ஸ்வேதாவை இழந்தார். தனது நண்பர்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிந்த போது நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பி சி.ஸ்ரீராமை மிகவும் பாதித்தது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீட்டில் மாட்டியிருக்கும் தனது மகளின் புகைப்படத்தை பார்த்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அவர். 10 ஆண்டுகளைக் கடந்தும் தனது மகளின் பிரிவை தாங்கிக்கொள்வது அவருக்கு எவ்வளவு சிரமமானதாக இருக்கிறது என்பதை இந்தப் புகைப்படத்தை வைத்து புரிந்துகொள்ளலாம். இந்தப் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் தங்களது ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்
மீண்டும் கோலிவுட் வாசம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட என அனைத்து மொழி படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்திய பி.சி.ஸ்ரீராம் தமிழில் கடைசியாக 'ஓ காதல் கண்மணியே' மற்றும் 'ரெமோ' படத்தில் பணிபுரிந்திருந்தார். அதனை தொடர்ந்து இந்தி, தெலுங்கு திரையுலகம் பக்கம் பிஸியாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட நவரசா வெப் சீரிஸில் கெளதம் மேனன் இயக்கிய கிட்டார் கம்பி மேலே நின்று படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.