சின்னத்திரையில் கலக்கிய பல நடிகர்கள் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து இன்று பெரிய அளவில் ஆளுமை செய்து வருகிறார்கள். அந்த  வகையில் வெள்ளித்திரையில் ஒரு தரமான காமெடியனாக, பார்த்தாலே சிரிப்பு வரும் வகையில் பருமனான உடல் தோற்றம், சுருட்டையான தலைமுடி, பேஷியல் எக்ஸ்பிரஷன்ஸ் என ரசிகர்களை தனது பக்கம் எளிதில் கவர்ந்து விட்டார். 


 



ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டுமே இருந்துவிடாமல் ஹீரோவாகவும், உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அப்லாஸ் பெற்றார். கோலமாவு கோகிலா, கூர்கா,தர்மபிரபு, யானை முகத்தான், பேய் மாமா, பன்னிக்குட்டி,  மண்டேலா, பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. பல முன்னணி நடிகருடன் இணைந்து காமெடியில் கலக்கிய யோகி பாபு தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் சரித்திர படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களான வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர். 


வைகை புயல் வடிவேலு நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. கார்ட்டூனிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கிய சிம்புதேவனுக்கு தனது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. வடிவேலுவின் திரை வாழ்க்கையிலும் இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தை எடுக்க திட்டமிடப்பட்டது ஆனால் சிம்புதேவன் மற்றும் வடிவேலு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது என கூறப்படுகிறது. 






அதே போல நகைச்சுவை அம்சம் கொண்ட சரித்திர திரைப்படம் ஒன்றை நடிகர் யோகி பாபுவை வைத்து எடுக்க முடிவெடுக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' பாணியில் ஒரு ஆல் டைம் ஃபேவரட்  படத்தை எதிர்பார்த்த திரை ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக அமைந்தது. அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும் இப்படத்துக்கு 'போட்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு கடல் சார்ந்த கதை என்பது டைட்டில் வீடியோ மூலம் அறியப்படுகிறது.