தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் சரியே இல்லை என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கடுமையாக விமர்சித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ள இவரின் ஒளிப்பதிவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் மத்திய, மாநில அரசை விமர்சித்து அவ்வப்போது பி.சி.ஸ்ரீராம் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 


நடந்தது என்ன? 


2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இப்படியான நிலையில் முதல் நாளான நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. 


அவர் பேசுகையில், ”நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.மேலும் தமிழ்நாடு அரசு அளித்த ஆளுநர் உரையில் இருக்கும் கருத்துகளை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்து அதனை படிக்காமல் புறக்கணித்தார். மேலும் சட்டப்பேரவையில் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவையின் மாண்பை ஆளுநர் மீறிவிட்டதாக ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.


ஆளுநர் மாளிகை விளக்கம்


அதில், “தமிழக அரசிடமிருந்து பெறப்பட்ட ஆளுநரின் உரையில்  உண்மைக்கு அப்பாற்பட்ட தவறான கருத்துகள் இருந்தது. ஆளுநரின் உரை அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது. இதனால் உரையை படிக்க இயலாது என கூறினார். 






சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்தார்.  ஆனால் சபாநாயகர் நாதுராம் கோட்சே போன்றோரை ஆளுநர் பின்பற்றுவதாக கூறினார். இதனால் ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” என தெரிவிக்கப்பட்டது. 


பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட பதிவு


இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர் ஆர்.என்.ரவி சார் மன்னிக்கவும். நீங்கள் நடந்து கொண்ட விதம் ஏற்கத்தக்கது அல்ல. ஏன் பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.