பிரபல ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் மு.க.ஸ்டாலினை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அவர் பதிவிட்டு இருக்கும் அந்தப்பதிவில், “ மனதில் நினைத்ததை மக்கள் முன்னர், பொதுவெளியில் பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். மு.க.ஸ்டாலின் ஒரு படி மேல் சென்று உண்மையை அனைவரிடமும் பேசி இருக்கிறார். இது இந்த உலகத்தில் முகத்திற்கு நேராக பேசுவது, வெளிப்படையாக, பயமில்லாமல் இருப்பது ஆகியவற்றின் வலிமையை காட்டுகிறது. அந்த வகையில் முகஸ்டாலின் நிமிர்ந்து நிற்கிறார்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
அண்மையில் சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை கழக பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, தலைவராக மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க-விலிருந்து வெளியேறிய காரணத்தால், அந்த இடத்தில் கனிமொழி நியமிக்கப்பட்டார்.
நொந்து கொண்ட மு.க.ஸ்டாலின்
அதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர்.
மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் இருக்கிறது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது. உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள்.
நீங்கள் சொன்னத்தை வெட்டி, ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம்” என்று காட்டமாக பேசியிருந்தார். இவரது பேச்சு ஒரு பக்கம் பாராட்டைப் பெற்றாலும், அவர் பயந்துவிட்டதாக கூறி பலர் அவரை ட்ரோல் செய்தனர். இந்த நிலையில் அவரை ஆதரிக்கும் வகையில் பிசிஸ்ரீராம் இந்தப்பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
ஸ்டாலினின் பேச்சு
"தி.மு.க. பழுத்த மரமாக இருப்பதால்தான் கல் எறிகிறார்கள். தி.மு.க. கல்கோட்டை. வீசப்படும் கற்களை வைத்து கோட்டை கட்டுகிறோம். தி.மு.க. தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. தமிழர்களின் சுயமரியாதையையும் தமிழ்நாட்டின் நலனையும் காக்கிற தி.மு.க.வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
தி.மு.க. தோன்றிய காலத்தில் இருந்த அதே சுறுசுறுப்பில் இன்னும் இருக்கிறோம். 3 ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு முன்னேற்றமான காலம். நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் வென்றிருக்கிறோம். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தி.மு.க. நிர்வாக பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தி வருகிறோம். தி.மு.க.வில் பதவிகளுக்கு போட்டு போடுகிறார்கள் என்றால் உழைப்பதற்காக என்று அர்த்தம். திமுக உட்கட்சி ஜனநாயகத்துடன் இயங்கி வருகிறது.
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும் ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்தும் திமுகவில் நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். தி.மு.க.வில் வாய்ப்பை பெற முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம். தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.
உள்கட்சி தேர்தலில் மோதல் வெடிக்கும் அதை எழுதலாம் என நினைத்த பாரம்பரிய பத்திரிகைகளின் ஆசையில் மண் விழுந்தது. தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்று இப்போது சொல்கிறார்கள். சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். தி.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். தொடர்ச்சியாக பல கூட்டங்களை தி.மு.க. நிர்வாகிகள் நடத்த வேண்டும்.
தி.மு.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள் கட்சிக்கும் அவர்களுக்கும் பெருமை தரக்கூடியவையாக இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் மிக மிக முக்கியமானது. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். தி.மு.க.வினர் பேசியதை ஒட்டியும் வெட்டியும் பரப்புவார்கள்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க. எந்த கீழ்த்தரமான செயலையும் செய்யும். அதிமுக கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குளிர்காய பார்க்கிறது பாஜக. திமுகவை எதிர்ப்பதை தவிர அதிமுகவுக்கு வேறு எந்த கொள்கையும் இல்லை. அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. அதிமுக சரிந்தும் சிதைந்தும் கிடக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கும் சொல்லிக்கொள்ள எந்த பெருமையும் இல்லாததால் நம்மை அவமதிக்க பார்ப்பார்கள்" என்றார்.