தேசிய ஒருமைப்பாட்டிற்கான தேசிய விருதை தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வழங்கியதற்காக தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார் ஓளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.


69-வது தேசிய விருது


2021-ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்தப் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருது வழங்கியது குறித்து சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.


இந்த நூற்றாண்டின் மோசமான தேர்வு






 ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் தற்போது தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான தேர்வு காஷ்மீர் ஃபைல்ஸ் என்று பதிவிட்டிருந்தார்.


ஜெய்பீம் படத்திற்கு விருது தராதது ஏன்?






தமிழ் சினிமாவை பொறுத்தவரை பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நடிகர் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ‘ஜெய் பீம்’, தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வெற்றிபெற்ற இந்தத் திரைப்படங்கள் எதுவும் தேசிய விருது வெல்லாதது, தமிழ் சினிமா ரசிகர்ளின் மத்தியில் அதிருப்தியடையச் செய்துள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைத்துறையில் இருப்பவர்களும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்து பி.சி.ஸ்ரீராம் ”ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை தருகிறதா?” என்று பதிவிட்டிருந்தார்.