சினிமாவில் காமெடியன் கேரக்டருக்கு இருந்த முக்கியத்துவம் எப்போது புரிந்தது என்பதை நேர்காணல் ஒன்றில் நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றிக் காணலாம்.
நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் லொடுக்கு பாண்டியாக அறிமுகமானவர் கருணாஸ். இதனைத் தொடர்ந்து ரஜினி, கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், தனுஷ், சிலம்பரசன் டிஆர், ஜீவா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் தலை காட்டினார். மேலும் இசையமைப்பாளர், பாடகர் என தனது திறமைகளை கருணாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
காமெடியன் முக்கியத்துவம்
இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்தேன். அந்த படம் சரியாக போகவில்லை. அதில் கதைப்படி எனக்கு இரண்டு வேடம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த ஹீரோவுக்கு (தனுஷ்) தொடர்ச்சியாக படம் ஓடிக் கொண்டே இருந்தது. அந்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் என்னுடைய கேரக்டரை இணைத்திருப்பார்கள். அதாவது இரட்டை வேடத்தில் ஒரு வேடம் போண்டா சாப்பிட்டு கொண்டிருப்பது போல இருக்கும். அந்த கேரக்டர் நடிக்கும்போதே எனக்கு பெரிதாக ஒட்டவில்லை. இயக்குநரிடம் கூட சொன்னேன். அவர் கேட்கவில்லை.
இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், நாளைக்கு (2004 பொங்கல்) அந்த படம் ரிலீசாகிறது என்றால், ஒருநாள் முன்னதாக ஏவிஎம் தியேட்டரில் பிரிவ்யூ ஷோ போடுகிறார்கள். நானும் படம் பார்த்தேன். கடைசியாக எல்லாரும் சென்ற பிறகு இயக்குநரை சென்று பார்த்தேன். அப்போது தலைவா எதுவும் வேலைக்கு ஆகவில்லை. படத்தில் ஒரு நான்கு சீன் வருகிறேன். அது நல்லா வந்துருக்கு. அதேநேரம் இந்த இரட்டை வேட கேரக்டர் டிராக்கை தூக்கி விடலாம் என சொன்னேன்.
அந்த நேரம் இயக்குநர் என்ன எண்ணத்தில் இருந்தாரோ, என்ன ஜி.. உங்க சீன் எல்லாம் நல்லாருக்கு என கூறி என்னை சமாதானப்படுத்தினார். அதன்பிறகு தியேட்டருக்கு சென்று பார்த்தால் எதுவும் ஒர்க் ஆகவில்லை. இதனையடுத்து இந்த படத்தில் கருணாஸ் நன்றாக பண்ணவில்லை, நடிப்பு வேஸ்ட் என விமர்சனம் செய்தார்கள்.அப்போது தான் சினிமாவில் காமெடியன் என்பவர் மிக முக்கியமானவர். ஹீரோ, ஹீரோயின், வில்லனுக்கு அடுத்து காமெடியன் தான் முக்கியமான ஆள் போல என்பது புரிய வந்தது” என கருணாஸ் கூறினார்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
2004 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷ், அபர்ணா பிள்ளை, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.