விழுப்புரம் : விழுப்புரம் அருகே வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி ரூ.30.00 கோடி மதிப்பில் தொடங்கியது.
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையில் ஓடும் முக்கியமான சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய தடுப்பணை அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 380 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளனர்.
கடந்த 28.01.2025 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் தொடக்க விழாவின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த முக்கிய கட்டுமானத் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள், விக்கிரவாண்டி வட்டம், வழுதாவூர் கிராமம் அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித் தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித் துறை அதிகாரிகளால் சங்கராபரணி ஆற்றில் விரிவான மட்ட அளவுகள் எடுக்கப்பட்டு, தள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், வீடூர் அணையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில், வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையில் தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
சங்கராபரணி ஆற்றின் முக்கிய நீர்ப்பாதை விவரங்கள்
சங்கராபரணி ஆறானது, விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் தொண்டியாறு மற்றும் வராகநதி ஆகிய இரண்டு ஆறுகள், வீடூர் அணையில் ஒன்றாகச் சேர்ந்த பிறகு கீழ்ப்புறத்திலிருந்து தொடர்கிறது. இந்த நீராதாரமானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய இரு பகுதிகளின் நிலப்பரப்பு வழியாக சுமார் 41.50 கி.மீ. தூரம் பாய்ந்து, இறுதியாக புதுச்சேரிக்கு அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் தடுப்பணை அமைப்பது அப்பகுதியின் நீர்வள மேலாண்மைக்கு மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்படுகிறது.
ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்தத் தடுப்பணை, அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதுடன், பல்வேறு முக்கியப் பலன்களையும் அளிக்கவுள்ளது, இந்தத் தடுப்பணையால், விக்கிரவாண்டி வட்டத்தைச் சேர்ந்த ஆறு கிராமங்களில் உள்ள 380 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் உறுதி செய்யப்பட்ட நீர்ப்பாசன வசதியைப் பெறும்.
இதனால் வழுதாவூர், கலிங்கமலை, வி.நெற்குணம், பக்கிரிப்பாளையம், கலித்திராம்பட்டு, முட்ராம்பட்டு. நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, நீர்மட்டம் கணிசமாக உயரும். தடுப்பணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியைச் சுற்றியுள்ள 218 எண்ணிக்கையிலான கிணறுகள் நேரடியாக நீர் செறிவூட்டப்படுவதன் மூலம் கோடைக்காலத்திலும் வற்றாமல் இருக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வது, விவசாய உற்பத்தியை பெருக்கும். மேலும், குடிநீரின் தரமும் மேம்பட்டு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை மேம்பட உதவும்.