நடிகை கெளரி கிஷனிடம் கார்த்திக் என்கிற பத்திரிகையாளர் அநாகரீகமாக கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது கெளரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த பத்திரிகையாளர்.
மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் அதர்ஸ் படத்தில் கெளரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர் கார்த்தி கெளரி கிஷனின் எடையை குறித்து கேள்வி கேட்டது பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. தனது உடல் எடை குறித்து கேட்பது அநாகரீகமானது மேலும் அது உருவ கேலி செய்யும் விதமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த மாதிரியான கேள்விகள் முட்டாள்த்தனமானவை என்று அவர் கூறியிருந்தார்.
அந்த பத்திரிகையாளர் தான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த கேள்வியை கேட்கவில்லை என்றும் முட்டாள் என்று சொன்னதற்காக கெளரி கிஷன் தன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அந்த கேள்வி முட்டாள்தனமானது தான் என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக பதிலளித்தார்.
பத்திரிகையாளர் மேல் விமர்சனம்
இந்த நிகழ்வு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் கெளரி கிஷனுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ரசிகர்களும் சமூக வலைதளத்தில் அந்த பத்திரிகையாளரை லெஃப்ட் ரைட் என்று வாங்கினர். தென் இந்திய நடிகர்கள் சங்கம் , பத்திரிகையாளர்கள் சங்கம் , தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். பல்வேறு தரப்பில் இருந்து கெளரி கிஷனுக்கு ஆதரவு பெருகியது.
கெளரி கிஷன் நன்றி
தனக்கு ஊடகங்கள் மற்றும் மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கெளரி கிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் சம்பந்தபட்ட அந்த தனி நபரை தாக்கும் நோக்கும் தனக்கு இல்லை இந்த பிரச்சனையை புரிந்துகொண்டு அனைவரும் ஒரு இயக்கமாக முன்னேற வேண்டும் என அவர் தனது இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்ட அந்த பத்திரிகையாளர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் நடிகை கெளரி கிஷனுக்கு மார்கெட் இல்லை அவரது அதர்ஸ் படத்தின் பப்ளிசிட்டிக்காகதான் கெளரி கிஷன் இந்த சர்ச்சையை பெரிதாக்கினார் என்று கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது
மன்னிப்பு கேட்ட பத்திரிகையாளர்
தான் கேட்ட கேள்வியில் எந்த உருவகேலியும் இல்லை என்று கூறிய அவர் ஒரு நடிகையான கெளரி கிஷனுக்கு இவ்வளவு ஈகோ இருக்கிறது என்றால் 32 வருடமாக பத்திரிகையாளராக இருக்கும் எனக்கும் ஈகோ இருக்கும் என்று கூறினார். தொடர் விமர்சனங்களுக்குப் பின் தற்போது தான் செய்தது தவறில்லை என்றாலும் கெளரி கிஷனின் மனம் புண்பட்டிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.