சம்பளம் பெற்றும் கால்ஷீட் வழங்காத நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்றும்,   அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்போவதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்  முடிவெடுத்துள்ளனர்.  


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பல விஷயங்களுக்கு ஒப்புதல் பெற்றனர். அதில் ஒன்று தான் சம்பளம் பெற்றும் கால்ஷீட் வழங்காத நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்ற முடிவை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்போவதாக  கூறப்படுகிறது.


 



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், அதர்வா, யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுக்காத சர்ச்சை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஐந்து நடிகர்களும்  தயாரிப்பாளர்களிடம்  இருந்து சம்பளம் பெற்று கொண்ட பிறகும் கால்ஷீட் சரிவர கொடுக்காமல் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர் என்பதால் அவர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். அதற்காக நடிகர்கள் சங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது. நடிகர் சங்கத்தின் விளக்கத்தை கேட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


ஐசரி கணேஷ் நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்று கொண்டு சரியாக கால்ஷீட் வழங்காத காரணத்திற்காக சிம்புவுக்கும், லைகா புரொடக்ஷன் நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடன் தொகையை செலுத்தாததால் விஷால் மீதும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்று கொண்டு கால்ஷீட் தராததால் எஸ்.ஜே. சூர்யா மீதும் அதே காரணங்களால் யோகி பாபு மற்றும் அதர்வா மீதும் தயாரிப்பாளர்கள் சங்கம் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்களின் புகாரில் படப்பிடிப்புக்கு மட்டுமின்றி டப்பிங் பேசவும் சரியாக தேதிகளை கொடுக்கவில்லை என்றும் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 


இந்த சர்ச்சை குறித்து திருப்திகரமான விளக்கம் கொடுக்கவில்லை அல்லது ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து விட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை திரையுலகத்தினர் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


ஊடக துறைக்கு வேண்டுகோள் :


அதே போல தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் ஊடக துறைக்கு ஒரு வேண்டுகோள் வைத்தனர். போன பொதுக்குழுவில் பேசிய அதே வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். ஒரு திரைப்படம் வெளியான உடனே படம் குறித்த விமர்சனங்களை யூடியூபர்கள் வெளியிடுவதால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான். அதனால் ஒரு மூன்று நாட்களுக்கு பிறகு படம் குறித்த விமர்சனங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மக்கள் அந்த மூன்று நாட்களுக்கு திரையரங்கம் சென்று படங்களை பார்க்கட்டும் என வேண்டுகோள் வைத்தனர்.


இன்றைய காலகட்டத்தில் பெரிய அளவு பட்ஜெட்டில் தான் படங்கள் எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தயாரிப்பாளர்கள் வெளியில் பணம் ஏற்பாடு செய்து தான் படத்தை எடுக்கிறார்கள். அதனால் படம் சரியாக போகாவிட்டால் பெரிய அளவில் நஷ்டப்படுவது தயாரிப்பாளர்கள் தான் என தனது  கோரிக்கையை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி முன்வைத்து இருந்தார் .