வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ஹீரோ கவினா? சிவகார்த்திகேயன் ரூட்டை பின்பற்றுகிறாரா?


நடிகர் சிவகார்த்திகேயன், சுரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தில் நடிகர் கவின் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனைப் போலவே தொலைக்காட்சியில் தொடங்கி சினிமாவில் கவின் பயணித்து வரும் நிலையில், இத்தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கான் திரைப்பட விழாவில் இந்தியத் திரைத்துறைக்கு பெருமை சேர்த்த பெண்கள்... வாழ்த்தும் பிரபலங்கள்!


ஆண்டுதோறும் பிரான்சில் நடைபெறும் உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களை கெளரவிக்கும் நிகழ்வான கான் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான க்ராண்ட் ப்ரிக்ஸ் விருதினை பாயல் கபாடியா இயக்கத்தில் 'All We Imagine As Light' எனும் இந்தியத் திரைப்படம் வென்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த இரண்டு மலையாளப் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் கடந்த 30 ஆண்டுகளில் எந்த இந்தியப் படமும் செய்திராத சாதனையை செய்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பல்வேறு திரைத்துறையைச் சார்ந்த இந்தியப் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


தெய்வக் குழந்தை மோடியை திட்டக்கூட முடியல.. விசிக விழாவில் கலாய்த்த பிரகாஷ்ராஜ்!


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆண்டுக்கான ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு வழங்கப்படும் விருது வழங்கும் விழா நேற்று காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ்ராஜூக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், “பிரதமர் மோடியை கடந்த 10 ஆண்டுகளாக எதிர்த்து கொண்டிருக்கிறேன். அவரை மன்னர் என சொல்ல முடியாது. இப்போது தெய்வ குழந்தையாகி விட்டார். நாட்டுக்கு அவரால் ஏதாவது துன்பம் ஏற்பட்டால் மனிதனா நீ என கேட்க முடியாது. தெய்வம் சோதிக்கும் என்று தான் சொல்ல வேண்டும்” எனப் பேசியுள்ளார்.


கம்பேக் கொடுத்த ராமராஜன்! சாமானியன் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?


வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்த வாரம் ராமராஜன் கம்பேக் தந்துள்ள சாமானியன், ஹிப் ஹாப் ஆதியின் பிடி சார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி சாமானியன் திரைப்படம் முதல் மூன்று நாள்களில் ரூ.10 லட்சங்கள் வசூலையும், பிடி சார் திரைப்படம் முதல் நாள் ரூ.70 லட்சங்கள் மற்றும் இரண்டாம் நாள் ரூ.1.14 கோடி வசூலையும் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.