காதல் கனவே.. மனைவிக்கு முத்தம்.. திருத்தணியில் சிம்பிளாக நடந்த நடிகர் பிரேம்ஜி திருமணம்..


தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர், பாடகர் , இசையமைப்பாளர் என பன்முகக் கலைஞராக வலம்  வரும் நடிகர் பிரேம்ஜி அமரனின் திருமணம் இன்று திருத்தணியில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. 45 வயதான பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில்,  இந்து என்ற வங்கி ஊழியரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.


21 வயதில் கனவு காணக்கூட நேரமில்லை.. குடும்ப சுமை, துபாயில் பட்ட கஷ்டம்.. விஜய் சேதுபதி பகிர்வு!


விஜய் சேதுபதியின் 50ஆவது படமான மகாராஜா படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி தான் துபாயில் 21 வயதில் வேலைக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.   என் குடும்ப சுமையைக் துபாய்க்கு சென்றேன். என்னால் அப்படிதான் உதவ முடிந்தது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு அனுப்புவேன். துபாயில் அங்கங்கு வைக்கப்பட்டிருக்கும் கூல் ட்ரிங்ஸ் வெண்டிங் மிஷினை பலநாள் ஏக்கத்துடன் பார்த்திருக்கிறேன். 21 வயது இளைஞனுக்கு கனவு காண கூட அங்கு நேரம் இருக்காது. துபாய் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் மகாராஜா படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பானபோது கூட நான் 21 வயதில் அங்கு வேலை செய்து எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை தான் யோசித்துக் கொண்டிருந்தேன்" எனப் பேசியுள்ளார்.


ஏன் இவ்வளவு வெறுப்பு? - கன்னத்தில் அறை வாங்கியது குறித்து பொங்கி எழுந்த கங்கனா!


சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு திரும்பிச் சென்றபோது சிஐஎஸ்எஃப் பெண் காவலாளி கங்கனாவை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்தேறியது. 100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள் என  கங்கனா பேசியதால் அறைந்ததாக பெண் காவலாளி கூறிய நிலையில் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா “ஒவ்வொரு கொலைகாரன், திருடன், பாலியல் குற்றவாளி என அனைவருக்குமே ஒரு குற்றத்தை செய்ய உடல், உணர்ச்சி, உளவியல் ரீதியிலான வலுவான காரணம் இருக்கும். குற்றவாளிகளுக்கு நீங்கள் ஆதரவாக இருந்தால் நாட்டின் அனைத்து சட்டங்களையும் மீறி ஒரு குற்றத்தை செய்வதற்கான உந்துதலாக அமைந்து விடும். இவ்வளவு  வெறுப்பு மற்றும் பொறாமையை சுமக்காதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.


"உங்கள் அர்ப்பணிப்பை கண்டு வியக்கிறேன்" - நடிகர் அஜித்தைப் பாராட்டிய இயக்குநர் ஆதிக்!


தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் முழுவீச்சில் கலந்துகொண்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக அஜித்துடன் ஷூட்டிங் தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஆதிக் “குட் பேட் அக்லி படத்திற்காக உங்களது அர்ப்பணிப்பும், ஈடுபாடும் வியக்க வைக்கிறது. எப்போதும் எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.