திருவண்ணாமலையில் தனுஷ் :
ராயன் படம் கடந்த ஜூலை 26ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் ஆகியோருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஆடி கிருத்திகை தினமான இன்று அதிகாலையிலே சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் சன்னதியில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இர்ஃபான் vs பிரியாணி மேன் சர்ச்சை :
பிரபல யூ டியூப் சேனலான பிரியாணி மேன் சேனலின் உரிமையாளர் அபிஷேக் மற்றும் பிரபல யூ டியூபர் இர்ஃபான் இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாகவே மோதல் நடைபெற்று வருகிறது. இவர்கள் இடையே நடந்த மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து பிரியாணி மேன் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கின. கடந்த ஒரு வார காலமாக இந்த சர்ச்சை மிகவும் மோசமான சூழலில் ஜூலை 29-ஆம் தேதி பிரியாணி மேன் சேனலை நடத்திவரும் அபிஷேக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் அவரை தற்கொலைக்கு தூண்டியதற்கு ஜேசன் என்பவர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரியாணி மேனின் இப்படியான செயலுக்கு மேலும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்கிற கருத்து வலுத்து வருகிறது.
'தி கோட்' அப்டேட் :
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் அப்டேட் எதுவும் ஜூலை மாதம் வெளியாகாததால் படம் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 5ம் வெளியாகாமல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கும் என சில வதந்திகள் பரவி வந்தன. ஆதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்ப அதற்கு தற்போது நல்ல பதில் ஒன்றை கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் 'தி கோட்' குறித்த அப்டேட் ஒன்று ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என தகவலை தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா :
நடிகை சமந்தா தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதற்காக சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தொடர்ச்சியாக செம்பருத்தி டீ குடித்து வருவதாகவும் தனது ரசிகர்களையும் செம்பருத்தி டீ குடிக்க பரிந்துரைத்துள்ளார். சர்க்கரை நோய் , உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு செம்பருத்தி டீ நல்லது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று நயன்தாரா தெரிவித்திருந்தார். இதை அவரின் ஊட்டச்சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் பரிந்துரைத்ததாக அவரை பாராட்டியிருந்தார். நயன்தாராவின் இந்த பதிவை டாக்டர் ஃபிலிப்ஸ் விமர்சித்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் செம்பருத்தி டீயின் மருத்துவ குணத்தைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்டவை எதுவுமே நிரூபிக்கப்படாத உண்மைகளே. இந்த பதிவு அவரது ஊட்டச்சத்து நிபுணரை ப்ரோமோட் செய்யும் நோக்கத்திற்காகவே அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார் என கடுமையாக சாடியுள்ளார். மருத்துவரின் இந்த பதிவை தொடர்ந்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கியுள்ளார்.