கூலி படத்தில் நடிக்க மறுத்த சீரியல் நடிகை


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன. கூலி படத்தில் ரஜினியின் மகளாக பிரபல சீரியல் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது . இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க அந்த நடிகை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூலி படக்குழு அந்த சீரியல் நடிகையிடம் நான்கு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால், அந்த நடிகை நடிக்கும் சீரியலின் தயாரிப்பாளர் தன்னுடைய சீரியலுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் யாருடைய படப்பிடிப்புக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். சீரியலுக்கான காட்சி அந்த நடிகையின் காட்சிகள் தினசரி படம்பிடிக்கப்பட்டு வருவதால் அவரால் கூலி படக்குழுவினர் கேட்ட 4 நாட்கள் கால்ஷீட்டை அவரால் தர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.


மீண்டும் இயக்குநராகும் எஸ் ஜே சூர்யா


 இயக்குநராக அறிமுகமாகி தற்போது நடிகராக தமிழ், தெலுங்கு மொழியில் கலக்கி வருகிறார் நடிகர் எஸ்.ஜே சூர்யா. தற்போது தனுஷின் ராயன் , விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் , ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் , நானி நடிக்கும் சர்போதா சனிவாரம் , உள்ளிட்ட படங்களில்  நடித்து வருகிறார். ராயன் திரைப்படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் பல்வேறு நேர்காணல்களில் எஸ்.ஜே . சூர்யா பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது சினிமா வாழ்க்கையைப் பற்றி பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டு வருகிறார். 


வாலி , குஷி , நியு , அன்பே ஆருயிரே , உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா கடைசியாக 2015 ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் படம் இயக்கப் போவதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ” இப்போது நான் இருக்கும் பிஸியில் என்னுடைய கால்ஷீட் எனக்கே கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் நான் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு இந்த படம் திரையரங்கில் வெளியாகும்படி திட்டமிட்டிருக்கிறேன்.” என்று எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார். 


திருமாவுக்கு எதிராக நிற்க மாட்டோம்


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி கூலிப்படை கும்பலால் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நேற்று ஆம்ஸ்ட்ராகின் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், “நாம் ஏதாவது பேசினாலே அதை பற்றி ஏதாவது கதைகளை கட்டிவிட்டு, நமது அண்ணன்களையே நமக்கு எதிராக நிறுத்துவது மிகவும் கவலைக்குரியது. அண்ணன் திருமாவளவனுக்கு நான் சொல்லிக் கொள்ள வேண்டியது, உங்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? எங்களுடையே குரலே நீங்கள் தான். உங்களை ஒருகாலமும் நாங்கள் விட்டுவிடமாட்டோம். உங்கள் கூடவே நிற்போம்.