இந்தியாவில், ஹாலிவிட்டிற்கென்றும் ஹாலிவுட் நடிகர்களுக்கென்றும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படி தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்ட ஒரு க்ரிஸ் ஹேம்ஸ்வர்த். மார்வல் யூனிவர்ஸில் இணைந்த பிறகு, இவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் டபுள், ட்ரிப்பிள் மடங்காக எகிறிவிட்டது. இவரது இயர் பெயரை விட, தோர்(Thor) என்ற பெயரால்தான் இவரை அனைவருக்கும் தெரியும். இவர் மட்டுமன்றி, இவரது இரண்டு சகோதரர்களான லூக் ஹெம்ஸ்வர்த் மற்றும் லியாம் ஹெம்ஸ்வர்த் ஆகியோரும் திரைத்துறையில் பிரபலங்களாக உள்ளனர். 




லிமிட்லெஸ் தொடரில் க்ரிஸ்


ஹாலிவுட் படங்களில் பிசியான நடிகராக வலம் வரும் க்ரிஸ், அவ்வப்போது சிறு சிறு தொடர்களிலும் நடித்து வருகிறார். அவரது பிரபல கதாப்பாத்திரமான, தோரின் பெயரில் புதுப்புது சீரீஸ்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில், “தோர் லவ் அண்ட் தன்டர்” என்ற தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. அடுத்து, இவரது லிமிட்லெஸ் என்ற தொடரும் ஹாட்ஸ்டாரில் வெளியானது. அட்வென்சர் டாக்குமென்டரியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், ஸ்கை டைவிங் செய்வது, நெருப்பு நிறைந்த வீட்டிற்குள் நுழைவது, பனி சறுக்கு செய்வது என தனது உயிரைப் பணையம் வைப்பது போன்ற சாகசங்களில் ஈடுபடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் க்ரிஸ் ஹெம்ஸ்வர்த் தான் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுக்கப்போவதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 




அல்சைமர்ஸ் நோயினால் பாதிக்கப்படும் அபாயம்…


லிமிட்லெஸ் தொடரின் ஒரு எபிசோடில் தன்னுடைய பயம் குறித்து பேசிய க்ரிஸ், பெற்றோர்களிடமிருந்து APOE4 எனப்படும் ஒரு வகை ஜீன் தனக்கு இருப்பதாக க்ரிஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்வகை ஜீன் இருப்பவர்கள், எளிதாக மனம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களாக இருப்பார்களாம். அந்த எபிசோடில் மேலும் பேசியுள்ள க்ரிஸ், “நம் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். அவைதான் நம்மை வடிவமைத்து, நம்மை நாமாக இருக்க உதவும்.  இந்த நோய் வந்தால், என் மனைவியையோ அல்லது என் குழந்தைகளையோ என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்ற எண்ணம் எனது மிகப்பெரிய பயமாக இருக்கிறது” என கூறியுள்ளார். 






லிமிட்லெஸ் படப்பிடிப்பின் போது நடந்த விஷயங்கள் தனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார், க்ரிஸ். இதனால், சிறிது நாட்கள் படங்களில் இருந்து ஓய்வு பெருவதாக கூறியுள்ளார். க்ரிஸ் ஹெம்ஸ்வர்த்திற்கு அல்சைமர்ஸ் நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற செய்தியை கேள்விபட்டவுடன் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.