பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். அவ்வப்போது தான் வைக்கும் விமர்சனங்கள் மூலமாக கவனம் பெறும் இவரின் கடைசி படமான ‘தாகத்’எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. இந்த நிலையில் கங்கனா அடுத்ததாக இயக்குநர் அலௌகிக் தேசாய் இயக்கும்'The Incarnation- Sita' என்ற புதியப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தின் கதையை பிரபல இயக்குநர் ராஜமெளலியின் தந்தையும், ‘பாகுபலி’ ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற படங்களின் கதை ஆசிரியருமான விஜேந்திர பிரசாத் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தில் நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் அலௌகிக் தேசாய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் போட்டோ.
விக்ரமுடனான போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், “ உங்களை சந்தித்ததின் வழியாக நிறைய தெரிந்து கொண்டேன். நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான அதே நேரம் மிகவும் உற்சாக மனிதர் நீங்கள்தான். பொன்னியின் செல்வனுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்த சந்திப்பு குறித்து திரை வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின் படி, விக்ரமை சென்னையில் சந்தித்த அலௌகிக் தேசாய் அவரிடம் 'The Incarnation- Sita' கதையை சொன்னதாகவும், கதையை கேட்ட விக்ரம் அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் ராமர் மற்றும் சீதையை சுற்றி நடக்கிறது. இந்தப்படத்தை எஸ்.எஸ்.ஸ்டியோ சார்பில் சலோனி சர்மா தயாரிக்கிறார்.
அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் பூஜை அண்மையில் நடந்து முடிந்தது.