அண்மைக் காலங்களில் பான் இந்திய திரைப்படங்களின் வருகை அதிகரித்து வருகின்றன. தற்போது இந்த ஓட்டத்தில் இணைய இருக்கும் அடுத்த நடிகர் விக்ரம் (Actor Vikram). தங்கலான் படத்தைத் தொடர்ந்து மலையாள இயக்குநர் ஒருவருடன் இணையவிருக்கிறார் நடிகர் விக்ரம். யார் இந்த இயக்குநர் தெரியுமா..


சீயான் விக்ரம்


சீயான் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விக்ரம், தமிழ் சினிமாவின் பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர்களில் ஒருவர். பிதாமகன், சேது, பிதாமகன், தெய்வத்திருமகள், ஐ, போன்ற படங்கள் மூலமாக தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தியவர். முன்னதாக இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கோப்ரா திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இப்படியான சூழலில் மணிரத்னம் இயக்கிய பொன்னியில் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்தார் விக்ரம். பொன்னியில் செல்வன் திரைப்படம் விக்ரமை மீண்டும் ஸ்பாட்லைட்டுக்கு கொண்டு வந்தது.]


தயாராகும் தங்கலான்


ஆதித்த கரிகாலன் ஃபீவர் இறங்குவதற்கு முன்பாகவே விக்ரமின் அடுத்த படத்திற்கான  அப்டேட் வெளியாகியது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் படத்தில் இணைந்தார்.


உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி பா. ரஞ்சித் இயக்கியுள்ள சரித்திரக் கதை தங்கலான். சீயான் விகரம். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி .பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.


ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் மோதலையும் மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. சீயான் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக தங்கலான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பான் இந்திய படத்தில் விக்ரம்


தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்தான கேள்வி இருந்து வந்த நிலையில், தற்போது தனது 62 ஆவது படத்திற்காக மலையாளத்தில் சமீபத்தில் ஹிட் அடித்த ‘2018’ ,  ‘ஓம் ஷாந்தி ஓஷானா’ ஆகிய படங்களை இயக்கிய ஜூட் ஆண்டனியுடன் விக்ரம் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, விஜய் சேதுபதி, கிச்சா சுதீப்,  நிவின் பாலி என பல கலைஞர்கள் நடிக்க இருப்பதாகவும், லைகா நிறுவனம் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் தவிர பல மொழிகளில் ரிலீஸாக இருக்கும் இந்தப் படம் ஒரு பான் இந்திய சினிமாவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தங்கலான் ரிலீஸ்


அண்மையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன . படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் சில காலம் படப்பிடிப்பு தாமதாகியதும் ஒரு காரணம். இந்நிலையில் தங்கலான் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு  வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.