சித்தா


 நடிகர் சித்தார்த் நடித்து கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு அருண்குமார் இந்தப் படத்தை இயக்கினார். நிமிஷா சஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சித்தா திரைப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது. 


மக்களை கவர்ந்த சித்தா


பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை மையக் கதையாக வைத்து எடுக்கப்பட்ட சித்தா திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் பல்வேறு முக்கியமான விவாதங்களை சித்தா திரைப்படம் துவங்கி வைத்தது. மேலும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன. குறிப்பாக சந்தோஷ் நாராயணன் பாடிய உனக்கு தான் பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களை எட்டியுள்ளது. 


வைரலாகும் டப்பிங் வீடியோ






சித்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக சஹாஸ்ரா ஸ்ரீ நடித்திருந்தார். மிக சவாலான ஒரு கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக அவர் நடித்துள்ளார். குழந்தை நடிகர்களை நடிக்க வைப்பது என்பது ஒரு இயக்குநருக்கு எப்போதும் சவாலான விஷயம். அதிலும் குறிப்பாக படப்பிடிப்பைக் காட்டிலும் டப்பிங் இன்னும் சவாலானதாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் சித்தா படத்தின் டப்பிங் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் வீடியோவில் சஹாஸ்ரா ஸ்ரீயிடம் இயக்குநர் தனக்கு வேண்டிய உணர்ச்சிகளை சொல்லிக் கொடுத்து அவரை நடிக்க வைப்பது டப்பிங் செய்வது எவ்வளவு கடினமானது அதிலும் குழந்தை நட்சத்திரங்களை எப்படி பக்குவமாக கையாள வேண்டும் என்பதை காட்டுகிறது. அருண்குமார் சொல்லிக் கொடுக்க, அந்த சிறிய பெண் கச்சிதமாக உணர்ச்சிகளை தன் குரலில் வெளிப்படுத்துவது பார்வையாளர்களை வியக்க வைக்கிறது.


சியான் 62






சித்தா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண்குமார், சியான் விக்ரமின் 62-வது படத்தை இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சீயான் 62 படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.