சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விகரம் நடித்து வரும் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.


விக்ரம்


தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விக்ரம். சேது, பிதாமகன், அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, ராவணன் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அதே நேரம் சாமி, தூள், தில், ஜெமினி உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்கள் விக்ரமுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளன. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்த கரிகாலனாக தோன்றிய விக்ரம் தனது பார்வையாளர்களைக் கவர்ந்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள படம் சீயான் 61.


சீயான் 62


இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது.  பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்த இயக்குநர் சு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.


ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மாமனிதன், ஆர்.ஆர்.ஆர், டான், கேப்டன் உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இத்தயாரிப்பு நிறுவனம் மும்பைக்கார் மற்றும் தக்ஸ் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் நடிகர் விக்ரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்து பின்னணியில் அமைந்த கதையில் காணப்பட்டார். இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா இருவரது ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.






நிலுவையில் நிற்கும் விக்ரம் படங்கள்


ஏற்கெனவே நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகாமல் பல சவால்களை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல்கள் வர இருப்பதால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரம் நடித்துள்ள அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் நெருங்கி பின் தள்ளிப்போவது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்லது. இப்படியான நிலையில் சியான் 62 படத்தின் இந்த அப்டேட் அவர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.