சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கணிதத் துறைப் பேராசிரியராக இருந்து, கணினி அறிவியல் துறையிலும் பணிபுரிந்தவர் தங்கவேலு. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டபோதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.


என்ன குற்றச்சாட்டுகள்?


தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவதில் ஆகியவற்றில் தங்கவேலு நிதி முறைகேடு செய்ததாகவும் கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதேபோல, அளவுக்கு அதிகமாக கணினிகள் வாங்கி, அதிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.  ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு, அவுட்சோர்சிங் பணிகளுக்கான ஆள் தேர்வில் மோசடி என பதிவாளர் தங்கவேலு மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் குவிந்தன.


இவற்றை விசாரித்த தமிழக அரசு, குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபணம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தது. தொடர்ந்து பதிவாளர் தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்யவும், பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு உத்தரவிட்டது. பதிவாளர் தங்கவேலு பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


விசாரணைக் குழு அமைப்பு


முன்னதாக, சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்தது. குறிப்பாக உயர் கல்வித்‌துறை அரசு கூடுதல்‌ செயலாளர்‌ பழனிசாமி மற்றும்‌ அரசு இணைச்‌ செயலாளர்‌ இளங்கோ ஹென்றி தாஸ்‌ ஆகியோர்‌ கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.‌


துணை வேந்தர் கைது


எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.