எஸ்.எஸ். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது. உலகளவில் இந்திய சினிமாவை கொண்டு நிறுத்திய இயக்குனர் ராஜமௌலிக்கு அனைத்து திசைகளிலும் இருந்து பாராட்டுகள் குவிக்கின்றன. இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆங்கில மொழி இல்லாத சிறந்த ஒரிஜினல் பாடல் என்று பிரிவில் கோல்டன் குளோப் விருதை கைப்பற்றியது. மேலும் வரவிருக்கும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
வசூலில் சாதனை :
பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகர்களாக நடித்த இப்படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் உலகெங்கிலும் 1,100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் ராம் சரண் :
2023-ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருதுகள் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் கலந்துகொள்ள இருக்கிறார் நடிகர் ராம் சரண். அதற்கான புதன்கிழமை அன்று அமெரிக்கா வந்திறங்கிய ராம் சரண் அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தென்னிந்திய நடிகர்களில் அதிலும் தெலுங்கு நடிகர்களில் முதன்முதலாக அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்னர் பலமுறை நடிகை பிரியங்கா சோப்ரா இதில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்பு, சகோதர பாசம் உள்ளிட்டவையை மையமாக வைத்து வெளியான இப்படம் அமெரிக்காவில் ரீ -ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியானது.
சிரஞ்சீவியின் ட்வீட் :
தனது மகன் இந்த பிரபலமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிகவும் பெருமிதம் கொண்டுள்ள அவரின் தந்தை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கம் மூலம் அழகான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். "இந்த பிரபலமான நிகழ்ச்சியில் ராம் சரண் கலந்து கொண்டது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிற்கும் தெலுங்கு திரையுலகிற்கும் மிகவும் பெருமையான தருணம். ராஜமௌலி தனது தொலைநோக்கு பார்வையால் தான் இது சாத்தியமாகியுள்ளது. வாழ்த்துக்கள்!!!" என பெருமையுடன் ட்வீட் செய்து இருந்தார்.
இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் :
குட்மார்னிங் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராம் சரண் "அடுத்த திரைப்படம் மூலம் விரைவில் உலக சினிமாவில் கால் பதிப்பார் இயக்குனர் ராஜமௌலி. அடுத்ததாக அவர் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ராஜமௌலி " என்றார்.
மேலும் அவர் கூறுகையில் "ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கிடைத்த பெருமை ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும், தென்னிந்திய தொழிநுட்ப கலைஞர்கள் அனைவரையுமே சேரும். இந்தியாவில் நாங்கள் சாதிக்க நினைத்த அனைத்தையும் சாதித்து விட்டோம் என நினைக்கையில்தான் இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பதை புரிந்து கொண்டோம். சாதிக்க வேண்டியது இன்னும் பல உள்ளன" என்றார்.