தெலுங்கு திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையிலகின் 'ரெபெல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜூ 1940 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி மேற்கு கோதாவரியில் உள்ள மொகல்தூருவில் பிறந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு சிலகா கோரிங்கா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றார். பல படங்களில் அழகான வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்த அவர் இதுவரை 183 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கிருஷ்ணம் ராஜூ கடைசியாக இந்த ஆண்டு வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இவர் நடிகர் பிரபாஸின் மாமா ஆவார். கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி , “ ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன், ரிபெல் ஸ்டார்” என்று ட்வீட் செய்தார்.
மகேஷ் பாபு “ கிருஷ்ணம் ராஜு காலமான செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு சினிமா துறைக்கும் இது ஒரு வருத்தமான நாள். அவர் வாழ்க்கை, அவரது பணி மற்றும் அவரின் பெரும் பங்களிப்பை சினிமா துறை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். எனது ஆழ்ந்த அனுதாபங்களை, நடிகர் பிரபாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்து கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் “கிருஷ்ணம் ராஜுவின் இழப்பு, நீங்கா சோகத்தை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஆன்மா சாந்தி அடையட்டும்.”என்று அவரின் இரங்கலை தெரிவித்தார்.