Chiranjeevi: சமூகத்தில் மதிக்கத்தக்க நபராக உள்ள நடிகர் சிரஞ்சீவி, பொதுவெளியில் பேசும்போது சிந்தித்து பேச வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிரஞ்சீவியால் வெடித்த சர்ச்சை:

ஐதரபாத்தில் பிறந்து மறைந்த கவிஞரும், அரசியல் ஆளுமையுமான சரோஜினி நாயுடுவின் பிறந்தநாளை ஒட்டி, இன்று தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அவர் பெண்களின் முன்னேற்றம், பாலின சமத்துவத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக அறியப்படுகிறார். இந்நிலையில் அதே பிராந்தியத்தைச் சேர்ந்த மற்றொரு பிரபலமான நடிகர் சிரஞ்சீவி பேசிய, பாலினம் தொடர்பான கருத்து தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.  தனக்கு ஒரு பேரன் வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அவர் வெளிப்படுத்திய விருப்பம் தான், எதிர்பாராத திருப்பமாக மாறியது. அவரது வார்த்தைகளில் உள்ள பாலியல் ரீதியான கருத்துக்களையும், தனது சந்ததியைத் தொடர ஒரு ஆண் குழந்தை மீதான எதிர்பார்ப்பையும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

சிரஞ்சீவி சொன்னது என்ன?

அண்மையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிரஞ்சீவி, ”நான் வீட்டில் இருக்கும்போது, ​​என் பேத்திகள் என்னைச் சுற்றி இருப்பது போல் உணர்வதில்லை. நான் ஒரு பெண்கள் விடுதி வார்டன், சுற்றிலும் பெண்கள் இருப்பது போல் உணர்கிறேன். இந்த முறையாவது (ராம்) சரண் ஒரு பையனைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். அப்போதுதான் நம் மரபு தொடரும், ஆனால் அவருடைய மகள் அவருடைய கண்ணின் மணி. அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறக்குமோ என்று நான் பயமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

குவியும் கண்டனங்கள்:

தனது மரபு குறித்தும், ராம் சரண் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று கேட்பது குறித்தும் சிரஞ்சீவி கூறிய கருத்து இணையத்தில் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகின்றன. இதுதொடர்பான ஒரு சமூக வலைதள பதிவில், "துரதிர்ஷ்டவசமாக 2025 ஆம் ஆண்டிலும் நிலவும் ஒரு பிரச்சினையை இந்தப் பதிவு எடுத்துக்காட்டுகிறது. சிரஞ்சீவியைப் போன்ற ஒருவர் காலாவதியான பாலின சார்புகளை நிலைநிறுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஆண் வாரிசு மீதான வெறி ஏமாற்றமளிக்கிறது மட்டுமல்லாமல், அவசர மாற்றம் தேவைப்படும் ஒரு சமூக மனநிலையின் பிரதிபலிப்பு இது" என தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபர், "சிரஞ்சீவி, தனது செல்வாக்கின் மூலம், சமத்துவத்திற்காக வாதிடலாம், இந்த பழமைவாத எண்ணங்களை உடைக்கலாம், ஆனால் இங்கே நாம், இன்னொரு பேத்தியைப் பெறுவது குறித்த அவரது பயத்தைப் பற்றி விவாதிக்கிறோம். பாலினத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஆசீர்வாதம் மற்றும் மரபுக்கு சமமாக பங்களிக்கிறது என்பதை அங்கீகரிக்க, பரிணமிக்க வேண்டிய நேரம் இது" என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் "அவரது பேத்தியும் அவரது பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும். அவரது மருமகளும் அவரது உடன்பிறந்தவர்களும் அப்பல்லோவை அல்லது அஸ்வினி தத்தின் குழந்தைகளை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்பதை மட்டுமே அவர் பார்க்க வேண்டும். பிற்போக்குத்தனமான சிந்தனை" என சிரஞ்சீவியை ரவுண்டு கட்டி சாடி வருகின்றன.

சிரஞ்சீவியின் பேத்திகள்:

ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனாவிற்கு, கடந்த ஜூன் 2023 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிளின் காரா என பெயர் சூட்டப்பட்டது. மகன் ராம் சரண் தவிர, சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீஜாவுக்கு நவிக்ஷா மற்றும் நிவ்ரதி என்ற இரு மகள்களும்,  சுஷ்மிதாவிற்கு  சமரா மற்றும் சம்ஹிதா என்ற இரு மகள்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.