தனது இன்பாக்ஸிற்கு பிறப்புறுக்களை புகைப்படம் எடுத்து அனுப்பிய ஆண்கள் பற்றி புகார் தெரிவித்ததால், தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டதாக பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்.
புதிய இன்ஸ்டாகிராம் கணக்கு
இது குறித்து முன்னதாக ட்வீட் செய்துள்ள சின்மயி, ”அடிப்படையில் எனக்கு இன்பாக்ஸில் தங்கள் பிறப்புறுப்புகளை புகைப்படம் எடுத்து அனுப்பிய ஆண்கள் குறித்து புகார் தெரிவித்ததற்காக என் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.
நான் கொஞ்ச நாள்களாகவே இது குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகிறேன். ஆனால், இப்போது என் கணக்கு தான் நீக்கப்பட்டுள்ளது. அதனால் புதிதாக பேக் அப் அக்கவுண்டை தொடங்கி உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்
பாடகி சின்மயிக்கு முன்னதாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சின்மயி ’மாஸ்கோவின் காவிரி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவீந்தரை கடந்த 2014ஆம் ஆண்டு சின்மயி திருமணம் செய்து கொண்டார். தன் தனிப்பட்ட வாழ்வு, திருமண வாழ்வு பற்றிய புகைப்படங்களை சின்மயி தன் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகம் பகிராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலாசிரியர் வைரமுத்து மீதான 'மீ டூ' புகாரைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக திரைப் பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறைகளிலும் பெண்களிடம் அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக சின்மயி தொடர்ந்து குரல் எழுப்பியும் கண்டித்தும் வருகிறார்.
தனி நபர் தாக்குதலுக்கு ஆளாகும் சின்மயி
மேலும், சின்மயி சமீப காலமாக தன் பாடல்கள் தாண்டி, தன் சமூக வலைதளக் கருத்துகள் மூலமே அதிகம் அறியப்படுகிறார். தன் கருத்துக்களுக்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனி நபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த சின்மயி தாயாகாதது குறித்தும் பலர் மோசமாக அவரது பதிவுகளில் கமெண்ட்ஸ் செய்தும் வந்தனர்.
இச்சூழலில், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சின்மயி தான் கர்ப்பம் தரித்தது குறித்து எந்தப் பதிவுகளும் இடாமல், தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது குறித்து முன்னதாகப் பதிவிட்டார்.
ஆனால் குழந்தை பிறந்தபின்பும் அவர் பல எதிர்மறைக் கருத்துக்களை சமூக வலைதளங்களில் துணிச்சலுடன் சந்தித்தும், இது குறித்துப் பதிவிட்டும் வருகிறார்.