வைரமுத்துவுக்கு ஆதரவாக சீமான கருத்து கூறிய நிலையில், அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பதால் அவர்களின் பெயரை சொல்லி பெண்களை கவிஞர் அச்சுறுத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை என பாடகி சின்மயி கூறியுள்ளார். இதுதொடர்பாக சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வைரமுத்துவின் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பெண்கள் தாமாக முன்வந்து பேசினாலும், வேட்டையாடிக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் நிற்பதென்பது வெளிப்படையாகவே பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மௌனிக்க வைக்கும் செயலாகும். அரசியல்வாதிகளின் பரிபூரண ஆதரவு இருப்பதால் அவர்களின் பெயரை சொல்லி பெண்களை கவிஞர் அச்சுறுத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால்தான் அந்த விருதுகளுக்கு பெருமை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விருதுகள் உள்ளிட்ட பலநூறு விருதுகளைப் பெற்று, தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ந்திருக்கிற கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டால், அந்த விருதுகளுக்குதான் பெருமையே ஒழிய, நிறைகுடமாய்த் ததும்பும் அவருக்கல்ல. திட்டமிட்ட வன்மத்தோடு வைரமுத்துவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இனத்தையே அவமானப்படுத்துகிற இதுபோன்ற இழிசெயல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியவை மட்டுமல்லாது வன்மையாக எதிர்க்கப்பட வேண்டியவை. ஆகவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு வைரமுத்துவுக்கு எதிராக நடக்கும் சதிச்செயலை முறியடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறினார்.
முன்னதாக டுவிட்டரில் சின்மயி தன்னுடைய திருமணத்திற்கு எதற்காக வைரமுத்துவை அழைத்தார் என்பது தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார். அதில், "என் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க சொன்னதே அவருடைய மகன் மதன் கார்க்கி தான். நான் அவருடை தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று கூறிய பிறகும் அவர் என்னை அழைக்க சொன்னார்" எனப் பதிவிட்டிருந்தார்.
திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு கேரளாவின் உயரிய ஓ.என்.வி.குறுப்பு இலக்கிய விருது தரப்படுவதாக வந்த அறிவிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். Metoo விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஓ.என்.வி.குறுப்பு பெயரால் விருதா எனக் கொதித்தார்கள் கலைஞர்கள் சிலர். மலையாள நடிகர் பார்வதி, ரிமா கலிங்கல், வைரமுத்துவுக்கு எதிராகப் புகார் எழுப்பியவர்களில் ஒருவரான பாடகர் சின்மயி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இதையடுத்து விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அதன் அகாடெமி அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவின் மகன்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் உள்ளிட்டோர் சிலர் வைரமுத்துவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். சின்மயிக்கு ஆதரவாக சில நடிகைகள், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் உள்ளனர்.