நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்தாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் படம்
4 தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (ஆகஸ்ட் 10 ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
ஜெயிலர் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் சுமார் 1 கோடி டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் 900, கேரளாவில் 400, கர்நாடகாவில் 1093 ஸ்க்ரீன் என படு அமர்க்களமாக ஜெயிலர் படம் வெளியானது. போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்டுகள் என தியேட்டர் வளாகங்கள் திருவிழாக்கோலம் பூண்டது.
இதனிடையே முதல் நாள் முதல் காட்சி தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைத்து திரையுலக பிரபலங்களும் ஜெயிலர் படத்தை பார்த்து பாராட்டி தள்ளினர். பேட்ட படத்துக்கு பிறகு ரஜினியின் மாஸ் காட்சிகளோடு ஜெயிலர் படம் வெளியாகியுள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. இதனால் படம் வசூலில் பெரும் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படம் பார்த்த முதலமைச்சர்
இப்படியான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயிலர் படம் பார்த்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஜெயிலரைப் பார்த்ததற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களின் பாராட்டாலும், ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளாலும் படக்குழுவினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.