நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நெருங்கிய தோழியான பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு வலதுசாரிகளுக்கு எதிரான கருத்தை வெளிப்படையாக கூறிவருகிறார். அதுமட்டுமின்றி திறமை இருந்தும் பொருளாதார நிலையால் முன்னேற முடியாமல் தவிப்பவர்களுக்கு தன்னுடைய பிரகாஷ் ராஜ் ஃபவுண்டேஷன் மூலம் அவர் பல்வேறு உதவிகளையும் செய்துவருகிறார்.
அந்தவகையில் தற்போது ஏழை தலித் மாணவி ஸ்ரீசந்தனா என்பவரின் இங்கிலாந்து படிப்புக்கு பிரகாஷ் ராஜ் நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக மூடர்கூடம் திரைப்படத்தின் இயக்குநரான நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிரகாஷ் ராஜுக்கு வணக்கங்களும் நன்றிகளும். தந்தையில்லாத ஏழை தலித் பெண்ணான ஸ்ரீ சந்தனாவிற்கு, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறவும், முதுகலைப் படிப்பை முடிக்கவும் அவர் நிதி உதவி செய்துள்ளார். இப்போது அவளுக்கு அங்கு வேலை கிடைக்க நிதியுதவி செய்துள்ளார்.
ஒருவரின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி சார்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது மற்றோரு ட்வீட்டில், ரவுண்ட் டேபிள் இந்தியாவிலிருந்து ஒரு கட்டுரையை 2020ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி அனுப்பி சிறிய பங்களிப்பை செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். இது உண்மையா என கேட்டார்.
அதன் பிறகு ஸ்ரீசந்தனாவின் மாமா தொலைபேசி எண்ணை வழங்கினேன். அதனையடுத்து ஸ்ரீசந்தனாவிடம் பிரகாஷ் ராஜ் பேசி படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார்.
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்புகளை கூட, பல நூற்றாண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டதனாலேயே இருக்கும் ஏழ்மையின் காரணமாக, எட்டமுடியாத அவர்களுக்கு பிரகாஷ் ராஜ் போன்ற மனிதர்கள் ஒரு கலங்கரை ஒளி. நன்றி சார்” என பதிவிட்டுள்ளார்.
நவீனின் ட்வீட்டை ரீட்வீட் செய்திருக்கும் இயக்குநரும், நடிகருமான சேரன், “பிரகாஷ் ராஜ் எந்தவித சத்தமும் இல்லாமல் இதுபோன்ற உதவிகளை செய்துவருகிறார். நண்பர் பிரகாஷ் ராஜுக்கு சல்யூட்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்