தமிழ் சினிமாவில் ஆழமான அழுத்தமான திரைக்கதை மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். யதார்த்தமான உயிரோட்டம் கொண்ட அவரின் படைப்புகள் ஒவ்வொன்றுமே ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது. கே.எஸ். ரவிக்குமார் உதவி இயக்குநராக புரியாத புதிர், நாட்டாமை, சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர், 1997ஆம் ஆண்டு 'பாரதி கண்ணம்மா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 


 




வெற்றிக்கு அச்சாணி :


கிராம சூழ்நிலை, சாதி வேறுபாடு,பொருளாதார சூழல், ஏழை எளிய மக்களின் பிரச்சினைகள், காதல், குடும்ப பாசம், நட்பு, மனித உறவின் மகத்துவம், வாழ்வியல் அனுபவங்கள்,  இப்படி உயிரோட்டமுள்ள உணர்வுகள் கொண்ட திரைக்கதை தான் அவரின் வெற்றிக்கு அச்சாணி.


சிறந்த படைப்புகள் :


பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, தேசிய கீதம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மாயக்கண்ணாடி, திருமணம் என தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை படைத்தவர். ஒரு இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றவர். 


 



மகள் திருமணம் : 


இந்நிலையில் இயக்குநர் சேரன் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யாவுக்கும் நேற்று முன்தினம் சென்னை மயிலாப்பூரில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவை கே.எஸ். ரவிக்குமார், பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தி வைத்தனர். மேலும் சமுத்திரக்கனி, சிம்பு தேவன், பாண்டிராஜ் மற்றும் பல திரைபிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  சேரன் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 


 






 


நன்றி தெரிவித்த சேரன் :


மேலும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் திருமணத்திற்கு வருகை தந்து மனப்பூர்வமாக வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேரன் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 


 




"நேற்று நடந்த என் மகளின் திருமணத்தில் எனது பலமாய் நின்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோசமாய் பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பிவைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் ( இயக்குனர் ஆனவர்களும் வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி.." என சேரன் பதிவிட்டுள்ளார்.


அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :


இயக்குநர் சேரன் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் படங்களை இயக்கியும் வருகிறார். ஓடிடியிலும் 'சேரன்ஸ் ஜர்னி' என்ற பெயரில் சீரியல் ஒன்றின் மூலம் தடம் பதித்தார். கிச்சா சுதீப் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் சேரன். சமீபத்தில் குடிமகன் என்ற படத்தில் சேரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.