பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை சேரன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சேரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 


தமிழ் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள், பல கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா, காமராசர் ஆகியோர் மற்றும் பெரியார், கக்கன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இதற்கு முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.


அந்த வரிசையில் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக கடந்த சில நாள்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள கீழ்விசிறி கிராமத்தில் 1939ஆம் ஆண்டு சஞ்சீவிராய கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியினரின் 4வது மகனாக பிறந்த ராமதாஸ், மருத்துவராகப் பணியாற்றி, தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின் தங்கிய நிலையை கண்டு, அதனை உயர்த்துவது பற்றி சிந்திக்க தொடங்கினார்.


அனைத்து துறைகளிலும் அந்த சமுதாய மக்கள் முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை 1980ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி தொடங்கினார். இது பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றம் கண்டது. தற்போது பாமக தலைவராக ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வருகிறார்.


இந்நிலையில், தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கென தனி வாக்கு வங்கியை கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகவும், இந்தப் படத்தினை இயக்குநர் சேரன் இயக்குவதாகவும் கடந்த சில நாள்களாகத் தகவல்கள் பரவின. மேலும் நடிகர் சரத்குமார் மருத்துவர் ராமதாஸாக நடிப்பதாகவும் லைகா நிறுவனம் இந்தப் படத்தினை தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


இந்தத் தகவல் பாட்டாளி மக்கள் கட்சியினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், இயக்குநர் சேரன் தற்போது இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். "நண்பர்களே.. சரத்குமார் சாரும் நானும் ஒரு படம் இணைந்து வேலை செய்யப்போகிறோம்.. அதையே அவர் நேற்று வெளிப்படுத்தினார்... ஆனால் அது யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல.. அது வேறு படம்.. தவறான கருத்துக்களை எந்த அறிவிப்பும் இன்றி பகிரவேண்டாம்.. நன்றி...” என தன் எக்ஸ் தளத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.


 






சேரனின் இந்த விளக்கம், ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பாமகவினரை தற்போது அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.