சென்னை அசோக் நகரில் உதயம் திரையரங்கம் மூடப்படுவதைத் தொடர்ந்து இதுவரை சென்னையில் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை பற்றி பார்க்கலாம்.


உதயம் திரையரங்கம்


 சென்னை அசோக் நகரில் பல வருடங்களாக இருந்து வரும் உதயம் தியேட்டர் மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமார் நடித்த ஆனந்த பூங்காற்றே படத்தில் தேவா பாடிய உதயம் தியேட்டருல என் இதயத்த தொலைச்சேன் என்கிற பாடல் வரும். இன்னும் சில ஆண்டுகளில் இந்த பாடலில் வரும் எந்த தியேட்டரும் இருக்குமா? என்பது சந்தேகம்தான். 


1983-ஆம் ஆண்டு சென்னை அசோக் நகர் பகுதியில் உதயம் திரையரங்கம் கட்டப்பட்டது. 62,400 சதுர அடியில் அதாவது 1.3 ஏக்கர் பரப்பளவில் உருவான இந்த திரையரங்கில்  ரஜினி, கமல் , அஜித் , விஜய்  ஆகிய எல்லா ஸ்டார்களின் சூப்பர் ஹிட் படங்களும் ஓடியிருக்கின்றன. இந்த திரையரங்கத்திற்கு  மொத்தம் 53 நபர்கள் பங்குதாரர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த திரையரங்கத்தை விற்க முடிவு செய்தார்கள். கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த பங்குதாரர்களில் ஒருவர் 80 கோடி ரூபாய்க்கு இந்த திரையரங்கத்தை ஏலத்தில் சொந்தமாக்கியுள்ளார். உதயம் , மினி உதயம், சந்திரன், சூரியன் என மொத்த நான்கு திரைகள் இதில் உள்ளன.


மூடப்படுவதாக அறிவிப்பு


சென்னையில் பெரும்பாலான பழைய திரையரங்குகள் மூடப்பட்டு அந்த இடத்தில் மால்கள் கட்டப்பட்டுவிட்டன. தமிழ் சினிமாவின்  பல்வேறு கிளாசிக் படங்களை திரையிட்ட பல திரையரங்குகள் இன்று இல்லை. எஞ்சி இருக்கு ஒரு சிலவற்றில், உதயம் திரையரங்கும் ஒன்றாக இருந்தது. குறைவான பார்க்கிங் கட்டணம் , குறைந்த விலையில் பாப்கார்ன் என மத்திய தர வர்க்கம் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும் அஜித், விஜய் ரசிகர்கள் ஆட்டம்போட்டு முதல் நாள் முதல் ஷோவை கொண்டாடுவதற்கும் இந்த திரையரங்கம் ஏற்றதாக இருந்தது. ஆனால் சமீப காலங்களில் இந்த திரையரங்கத்தில் ப்ரோஜக்‌ஷனின் தரமும் சவுண்ட்  க்வாலிட்டியும் நன்றாக இல்லை என்கிற விமர்சனம் அதிகம் எழுந்து வந்தது.


மேலும் திரையரங்கில் இருக்கும் இருக்கைகள், சுகாதாரம் ஆகியவை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்தார்கள். இதனால் ரசிகர்களுக்கு இந்த திரையரங்கில் படம் பார்க்கும் ஆர்வமும் குறைந்தது. ஒரு சில படங்கள் தவிர்த்து மீதி நாட்களில் எதிர்பார்த்த கூட்டமும் வராத காரணத்தினால் இந்த திரையரங்கத்தை கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு விற்றுள்ளது நிர்வாகம். இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.


சென்னையில் மூடப்பட்ட திரையரங்குகள்


சென்னையில் உதயம் தவிர்த்து இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புரசைவாக்கத்தில் இருந்த அபிராமி தியேட்டர் இடிக்கப்பட்டு அபிராமி மால் ஆக மாறியது. சொத்து வரி செலுத்தாத காரணத்தினால் சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் வைக்கப் பட்டது. மயிலாப்பூரில் இருந்த 65 ஆண்டு பழமையான காமதேனு தியேட்டர் கடந்த 2008-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது