சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கங்கத்தை நடிகர் சதீஷ் திறந்து வைத்தார். அழகு, திறமை இல்லையென்றாலும் கூட கடுமையாக முயற்சி செய்தால் நன்றாக வரலாம் என்பதற்கு நான் கூட ஒரு சின்ன உதாரணம் என சதீஷ் பேசினார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டபட்ட பிவிஆர் திரையரங்கு 5 தியேட்டர்களை கொண்டு இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளது. இதனை திரைப்பட நடிகர் சதீஷ், ஆனந்த் ராஜ், கூல் சுரேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். 



 

பின்னர் திரையில் அதிநவீன 3டி தொழிநுட்பத்தில் திரை தயார் செய்திருப்பதாக விருந்தினர்களை அவதார் டிரைலர் திரையிட்டு காண்பித்தனர். அதனை 3டி கண்ணாடி அணிந்து பார்வையிட்டனர். பின்னர் பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. 



 

நிகழ்வில் பேசிய திரைப்பட நடிகர் சதீஷ், “சேலத்தில் இருந்து சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த போது படம் பார்ப்பதற்கு சத்யம் தியேட்டருக்கு சென்று 10 ரூபாய் டிக்கெட் எடுக்க காத்திருப்பேன், முதல் நாள் டிக்கெட் கிடைக்காது, நான்கு நாட்கள் படையெடுத்து 10 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு கில்லி, தூள், அந்நியன் ஆகிய படங்களை பார்த்து இருந்த ஒருத்தனுக்கு இன்று திரையரங்கு துவக்க விழாவிற்கு வரும் வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுள், மக்கள், உங்களுக்கும் நன்றி” எனக் கூறினார்.

 



 

மேலும், “அழகு, திறமை இல்லையென்றாலும் கூட கடுமையாக முயற்சி செய்தால் வரலாம் என்பதற்கு நான் கூட ஒரு சின்ன உதாரணம்” என்றார். 10 ரூபாய் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்கள் அடிக்கும் கமெண்ட் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று பேசினார். திறப்பு விழாவிற்கு எங்களை அழைத்ததற்கு எங்கள் குழுவிற்கு பெருமையாக இருப்பதாக கூறினார்.