மதுரை மாநகர் வில்லாபுரம் தமிழ்நாடு குடியிருப்பு நல வாரிய வீட்டில் வசித்துவரும் மணிகண்டன் என்பவர் தனது மனைவி லெட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.  இவர் நகை கடையை நடத்தி வருவதோடு, இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் எம்.கே.புரம் பகுதியில் மணிகண்டன் சாலையில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றபோது மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குபதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர்.



 

விசாரணையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியது.  வழக்கின் விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய குற்றப்பிரிவு காவலரான ஹரிஹரபாபு மற்றும் அதே காவல்நிலையத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடையை கூலிப்படையினரை பயன்படுத்தி   மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காவலரான ஹரிஹர பாபு தனது மனைவியிடம் இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை நகை வாங்குவது தொடர்பாக அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து காவலரின் மனைவி ஆடைகள் விற்பனை செய்துவந்தபோது அவ்வப்போது நகையை விற்பது வாங்குவது போன்று மணிகண்டனுடன் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.



 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக காவலர் ஹரிஹரபாபு எதேச்சையாக மனைவியின் செல்போனை எடுத்துபார்த்தபோது மணிகண்டனுடன்,  தனது மனைவியும் சேர்ந்து இருப்பது போன்றும் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ எடுத்துள்ளதும் செல்போனில் இருந்துள்ளதை பார்த்துள்ளார். மேலும் நகை தொழிலுக்காக  மணிகண்டன் காவலரிடம் பணத்தையும் கடனாகி வாங்கிவிட்டு அதனையும் திரும்ப கொடுக்காமல் இருந்துவந்துள்ளார். தனது மனைவியுடன் தவறான எண்ணத்தில் தொடர்பில் இருந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் சந்தித்த போது அவர்களை பயன்படுத்தி அவரை மிரட்டி மனைவியுடனான நட்பை தடுக்கலாம் என நினைத்துள்ளார்.



 

இதனையடுத்து குற்றவழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மாடு தினேஷ், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த குட்ட அஜித், அய்யப்பன், பல்லு கார்த்திக், புறா பாண்டி , ஹைதர் அலி ஆகியோர் மூலம் மணிகண்டனை கொலை செய்வதற்காக 75ஆயிரம் ரூபாய் கூலியாக கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த கும்பல் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவலர் ஹரிஹர பாபு உள்ளிட்ட 7 பேரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியுடன் தொடர்பில் இருந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகியை காவலரே கூலிப்படையை ஏவி பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண