சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்று காசி தியேட்டர். ரசிர்களுக்கு என்று ஒரு மனநிலை உண்டு. தங்களின் ஆதார்ஸ நாயகனின் படத்தை முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதை போன்றே, இந்த தியேட்டரில் தான் அந்த காட்சியை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களின் விருப்ப தியேட்டர்களில் ஒன்று தான் சென்னை காசி தியேட்டர். ரஜினி, அஜித், விஜய் என மாஸ் ஹீரோக்களின் படங்களை மறக்காமல் திரையிட்டு வரும் காசி தியேட்டரில், அவ்வப்போது மாஸ் ஹீரோக்கள் சைலண்ட் விசிட் அடித்து தங்கள் படத்தில் ரியாக்ஷனை பார்க்க விரும்புவர். இதுவரை அந்த மாதிரி நிறைய அனுபவங்களை காசி தியேட்டர் சந்தித்து இருக்கிறது. இதோ தன் அனுபவங்களை காசி தியேட்டர் உரிமையாளர் சுப்பிரமணியன், இணையதளம் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார். இதோ அந்த அனுபவ பேட்டி...


 



காசி தியேட்டர் உரிமையாளர் சுப்பிரமணியன்


‛‛விஜய் இங்கு வருவது யாருக்கும் தெரியாது. 3 முறை இதுவரை இங்கு வந்திருக்கிறார். மூன்று முறையும், எனக்கும், இந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கும்தான் தெரியும். அவர் வந்து படம் பார்த்து விட்டு திரும்பும்போதுதான், அவர் வந்த விபரமே படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு ரகசியமாக இருக்கும்.


அவரோட பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம். ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்படும்போது, அதை நிறைவேற்ற வேண்டியது தியேட்டர் உரிமையாளராக என்னோட கடமை. விஜய் அமைதியா வருவார்; தியேட்டர் உள்ளே இருக்கும் ரசிகர்களோடு அமர்ந்து அமைதியா படத்தை பார்ப்பார். சத்தமில்லாமல் படம் முடிஞ்சதும் போய்டுவார். கத்தி, மெர்சல், துப்பாக்கி  ஆகிய படங்களை பார்க்க விஜய் இங்கு வந்துள்ளார். 


மறுவேடத்தில் தான் விஜய் வருவார். இடம் சின்ன இடம்; ஆடியன்ஸ் கூட படம் பார்க்க வேண்டும் என்கிற அவரது ஆசையையும் நிறைவேற்ற  வேண்டும்; எங்களுடைய ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். வரக்கூடிய செலிபிரிட்டி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. கடைசி வரை தியேட்டருக்குள் விஜய் இருப்பதை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்வோம். விஜய் அருகில் இருப்பவர்களுக்கு கூட அவர்தான் அருகில் இருக்கிறார் என்பது தெரியாது. 


 



ரசிகர்களுடன் முதல் காட்சி பார்க்க வருகை தரும் விஜய்


பெரிய நடிகர்களுக்குதான் இந்த பிரச்சனை. மற்ற நடிகர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது. அவர்கள் வந்தது தெரிந்தே படம் பார்ப்பார்கள். இயக்குனர் சங்கர், தனது படத்தின் ஓப்பனிங் ஷோவை இங்கு வந்துதான் பார்ப்பார். அவர் இருக்கையில் கூட அமர மாட்டார்கள். பால்கனியில் ரசிகர்களுடன் ரசிகராக நின்று கொண்டேதான் படத்தை பார்ப்பார். கடைசி வரை உட்கார மாட்டார். எந்திரன், அந்நியன் படத்தை அவர் முழுக்க நின்று தான் பார்த்தார். 


முதல் காட்சி எனும் போது, ரசிகர்கள் சில நேரங்களில் சேதத்தை ஏற்படுத்துவார்கள். ஆனாலும் முழு ஒத்துழைப்பு தருவார்கள். சேதம் சில நேரம் வரும், அதை சரிசெய்து தான் திரையிடுவோம். குறிப்பாக அஜித், விஜய் படங்களை திரையிடும் போது, ரசிகர்கள் காட்சியில் சில சேதங்கள் வரும். ஸ்கிரீன் கூட கிழிக்கப்பட்டிருக்கிறது.  இப்போதெல்லாம் நல்லா ஒத்துழைப்பு தர்றாங்க. தொடர்ந்து அவங்க ஆசை நாயகர்கள் படத்தை நான் எடுப்பேன் என்பதால், நல்ல ஒத்துழைப்பு தர்றாங்க. 


 



துப்பாக்கி ஓப்பனிங் காட்சி கொண்டாட்டம்


ஒரு ஷோவுக்கு இடைவேளை என பார்த்தால் 12 நிமிடம்தான். ஒரு நாளைக்கு 48 நிமிடம்தான் விற்பனை நடைபெறும். வெளியில் நாள் கணக்கில் வியாபாரம் செய்வது போல ,தியேட்டரில் வியாபாரம் செய்ய முடியாது.  நாள் ஒன்றுக்கு 48 நிமிடம் நடக்கும் வியாபாரத்தை வைத்துதான், அதில் உள்ளவர்களுக்கு ஊதியம் தர வேண்டும், மற்ற செலவுகள் எல்லாம் செய்ய வேண்டும். அதனால் தான் கூடுதல் விலைக்கு தியேட்டர்களில் ஸ்நாக்ஸ் விற்கப்படுகிறது. தரமான பொருளாக இருக்க வேண்டும்; நார்மல் விலையில் விற்க வேண்டிய கட்டாயம். அதற்காக மால் அளவிற்கு விலையில் விற்பதில்லை. 


ரஜினி, அஜித், விஜய் படங்கள் தான் எங்கள் தியேட்டருக்கு நல்ல கலெக்ஷனை தந்துள்ளது. சில நேரங்களில் பிற நடிகர்களின் படங்களும் வசூல் தந்துள்ளன. ’’ என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண