ஒருவார காலமாக நடைபெற்று வந்த சென்னை திரைப்பட விழா நிறைவுக்கு வந்த நிலையில் இதில் சிறந்த படமாக ‘அயோத்தி’ செய்யப்பட்டது. 


இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல்  தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. ராயப்பேட்டை சத்யம் மற்றும் அண்ணா தியேட்டர்களில் திரைப்பட விழாவில் இடம் பெற்ற உள்ளூர் முதல் உலக படங்கள் அனைத்தும் திரையிடப்பட்டது. 


இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் 12 படங்களும், உலக சினிமாவில் 12 படங்களும் , இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட்டது. தமிழில் இருந்து 1. வசந்தபாலனின் 'அநீதி', மந்திரமூர்த்தியின் 'அயோத்தி', தங்கர் பச்சனின் 'கருமேகங்கள் கலைகின்றன', மாரி செல்வராஜின் 'மாமன்னன்'
விக்னேஷ் ராஜா டி, செந்தில் பரமசிவம் ஆகியோரின் 'போர் தோழில்', விக்ரம் சுகுமாரனின் 'ராவண கோட்டம்', அனிலின் 'சாயவனம்', பிரபு சாலமனின் 'செம்பி', சந்தோஷ் நம்பிராஜனின் 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்', கார்த்திக் சீனிவாசனின் 'உடன்பால்', வெற்றிமாறனின் 'விடுதலை', அமுதவாணனின் 'விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3' ஆகிய படங்கள் இடம் பெற்றது. 


இந்த திரைப்பட விழா நேற்று (டிசம்பர் 21) நிறைவடைந்தது. இதில் சிறந்தப் படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. அப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக உடன்பால் தேர்வு செய்யப்பட்டு அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறப்பு ஜூரி விருது விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றி மாறனுக்கு அறிவிக்கப்பட்டது. 


சிறந்த நடிகர் விருது  மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கும், சிறந்த நடிகையாக அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கும் கிடைத்தது. மேலும் சிறந்த ஒளிப்பதிவாளராக கலைச்செல்வன் சிவாஜி (போர் தொழில்), சிறந்த எடிட்டராக ஸ்ரீஜித் சாரங்  (போர் தொழில்), சிறந்த ஒலிப்பதிவாளராக சுரேன் (மாமன்னன்), பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் சிறந்த குறும்படமாக   தேர்வு செய்யப்பட்டது. மேலும் உலக சினிமாவிலும் பல படங்களுக்கு விருது கிடைத்தது. இந்த திரைப்பட விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.