பிரபல நடிகை ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 


தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் ஜெயப்பிரதா. இவர் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். 


ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் இணைந்து அண்ணாசாலையில் தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு 1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலித்த ரூ.8.17 லட்சமும், 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ரூ.1.58 லட்சம் இஎஸ்ஐ பணத்தை தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இதனை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்தி விடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் பணத்தை செலுத்தாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாக தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகம் சார்பில் வாதிடப்பட்டது. 


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடைசியாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தொழிலாளர் பணம் செலுத்தாதது தொடர்பாக பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ என கூற, அதற்கு நோட்டீஸ் அனுப்பி தன்னிலை விளக்கம் பெறாமல் நேரடியாக வழக்கு தொடரப்பட்டதாக ஜெயப்பிரதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதனையடுத்து வட்டியுடன் பணத்தை மீண்டும் செலுத்துவதாக இருந்தால் சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இஎஸ்ஐ தொகையை செலுத்தி இருந்தாலும், வட்டித் தொகையை செலுத்ததால் தண்டனையை நிறுத்த மறுத்ததோடு 15 நாட்களில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் ரூ.20 லட்சம் தொகையை 20 நாட்களுக்குள் டெபாசிட் செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.