சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இன்று கடுமையான சாலைப்போக்குவரத்து ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அப்போது தன் வாகனத்தில் இருந்த நடிகர் சரத்குமார் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர் செய்தார். ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டி அவர் வாகன ஓட்டுகளை கேட்டுக்கொண்டார். போக்குவரத்தை சரத்குமார் சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ட்விட்டரில் பலரும் அந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நாயகனாக இருந்தவர் சரத்குமார். இவர் பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் ஜொலித்த சரத்குமார் அரசியலிலும் கால்பதித்தார். சமத்துவ மக்கள் கட்சியை நிர்வகித்து வருகிறார் சரத்குமார். ஒருபக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என பயணித்து வரும் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் சினிமாவில் கால்பதித்து நடித்து வருகிறார். இதற்கிடையே சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தில் சுஹாசினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை திருமலை பாலுச்சாமி இயக்குகிறார். இது குறித்து பேசிய இயக்குநர் திருமலை, மண் சார்ந்த கதையை சரத்குமாரிடம் தெரிவித்தோம். உடனடியாக அவர் ஒப்புக் கொண்டார் என்றார்.
சரத்குமாரின் மனைவியுமான ராதிகாவும் இப்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அனபென் சேதுபதி திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ராதிகா. நேற்று முன் தினம் நடைபெற்ற சைமா விருது விழாவில் வானம் கொட்டட்டும் படத்திற்காக ராதிகா விருது வாங்கினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்