விஜய் டிவி குக் வித் கோமாளியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளில் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 5 ஆவது சீசனை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளியின் 5 ஆவது சீசனில் பங்கேற்கப் போவதில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு வரும் மற்ற வாய்ப்புகளுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். மேலும் விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான கதை கொண்ட நிகழ்ச்சியின் மூலம் உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று அவர் கூறியிருந்தார்.
வெங்கடேஷ் பட் தொடர்ந்து இரண்டு நாட்களில் செஃப் தாமுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். தானும் வெங்கடேஷ் பட் இணைந்து புதிதாக ஷோ ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் இருவரையும் பார்க்கலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
விஜய் டிவியில் இருந்து சன் டிவி
இனி குக் வித் கோமாளி ஷோவில் இனி யார் நடுவராக வரப் போகிறார்கள். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரின் இடத்தை அவர்கள் எப்படி ஈடு செய்யபோகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இணைந்து சன் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாகவும் வருன் ஞாயிற்று கிழமை இந்த நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சன் தொலைக்காட்சி விஜய் சேதுபதியை நிகழ்ச்சித் தொகுப்பாளராக வைத்து மாஸ்டர் செஃப் என்கிற நிகழ்ச்சியை நடத்தியது . ஆனால் இந்த நிகழ்ச்சி மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இணைந்து வழங்கும் இந்த புதிய நிகழ்ச்சி மக்களின் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிரது.