யுவன்ஷங்கர் ராஜா, தமிழ் சினிமா இசையின் நாயகன். இசை கேட்கும் நெஞ்சங்களை ஆற்றுப்படுத்தும் கருவி அவர். யுவனின் இசை வெறும் பாடல் ரசனையாக முடிந்து விடுவதில்லை. துன்பத்தில் உழலும் மனதை, அழுத்தம் மிகுந்த மனதின் வெறுமையை ஆற்றுப்படுத்தும் ஆறுதல் மருந்தாகவே அவரது குரல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. வாழ்வின் பல தருணங்களில் நம்மை மனமுருக செய்யும், பல அற்புத பாடல்களை  தன் குரலில் தந்த யுவன், அடுத்த விருந்தாக “மாமனிதன்”  படத்திலிருந்து இரண்டாவது பாடலாக “ஏ ராசா” பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் பலவிதமான உணர்வுகளை ஒன்றாக வெளிப்படுத்தும் பாடலாக,  வாழ்வின்  மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் பாடலாக, ஆத்ம திருப்தி தரும் பாடலாக, இந்த பொதுமுடக்க காலத்தில் நம் மனதிற்கு இனிமையை தரும் பாடலாக அமைந்துள்ளது. 



வாழ்வின் மீதான நம்பிக்கையை நிலைப்படுத்தும் இப்பாடல், யுவனின் குரலில் ரசிகர்களை புது வித அனுபவத்திற்கு எடுத்து செல்கிறது. பா விஜய் அவர்களின் பாடல் வரிகள் நம் மனதை கொள்ளை கொள்ளும்படி அமைந்துள்ளது. இந்த கடினமான காலத்தில் ஆத்மாவை சாந்தப்படுத்தும் அற்புத இசையை தந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடல் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, யுவன் அவர்கள் தனியாக  தோன்றும் வீடியோ வடிவிலும் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மனதை ஆற்றுப்படுத்தும் அதே நேரம், கண்களுக்கும் இனிமை தரும் விருந்தாக, நம்பிக்கை தரும் மருந்தாக உள்ளது இப்பாடல். 


இளையராஜா அவர்களும் யுவன் சங்கர் ராஜா அவர்களும் இணைந்து இசையமைத்திருக்கும் இப்பாடலை, யுவன் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். கவிஞர் பா.விஜய் இப்பாடலை எழுதியுள்ளார். விஜய் சேதுபதி, காயத்திரி முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “மாமனிதன்” படத்தினை இயக்குநர் சீனு ராமசாமி தயாரித்துள்ளார்.