நடிகை சார்மி என்ற சார்மிளா தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். அவரை கிளாமர் நடிகையான ஷகிலா ஒரு யூடியூப் சேனலுக்காக பேட்டியெடுத்தார்.
அந்தப் பேட்டியில் சார்மி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் சென்னையில் தான் பிறந்தேன். சென்னையில் தான் படித்தேன். படிக்கும் போதே எனக்கு சினிமா வாய்ப்பு வந்திடுச்சு. காரணம் அப்பாவுக்கு பாலாஜி அங்கிள் ஃப்ரெண்ட். அதனால, நான் சினிமாவில் நடிச்சேன். எனக்கும் சினிமாவில் நடிக்கப் பிடித்திருந்தது. ஆனால் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தாரு. அதனால் சம்மர் லீவில் மட்டும்தான் நடிச்சேன். முதன்முதலில் நான் ஹீரோயினா நடித்தது ஒரு மலையாளப் படம். அதில் மோகன்லால் சார் தான் ஹீரோ. எனக்கு அவர் தான் வாழ்வு கொடுத்தார் என்பேன். அந்தப் படம் மெகா ஹிட் ஆனது. அப்புறம் அவருடன் இன்னொரு படமும் நடித்தேன். மலையாளத்தில் 38 படங்கள் நடித்தேன். அதில் 22 ஹிட். என்ன ஒரே வருத்தம் என்றால் மம்முடியுடன் நடிக்க முடியவில்லை என்பது மட்டுமே என் வருத்தம்.
தமிழிலும் நிறைய படங்களில் நடித்தேன். தமிழில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ மைக் மோகன். ஒருமுறை அவருடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவரைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை தெரிவித்தேன். நடிப்பு, நிறைய பணம் என எல்லாம் நன்றாகத் தான் போனது. என் வாழ்க்கையில் பாபு ஆண்டனி வந்தார். இருவரும் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். ஆனால் ஒருக்கட்டதில் அவரிடம் என் பணம், வீடு எல்லாவற்றையும் இழந்தேன். அவரைப் பிரிந்தேன். அப்புறம் மீண்டும் நடிக்கச் சென்றேன். அப்போதுதான் மலையாளத்தில் கிஷோர் சத்யா அறிமுகமானார். அவர் உதவி இயக்குநராக இருந்தார். என் காயங்களுக்கு அவர் மருந்தாக இருந்தார். அவரை முறைப்படி மணந்தேன். அவர்தான் என் முதல் கணவர். ஆனால் அவரும் என் பணத்திற்கும், உடம்புக்கும், புகழுக்கும் மட்டும் தான் ஆசைப்பட்டார் என்பது தெரிந்தது. அவரை விவாகரத்து செய்தேன். சில வருடங்களுக்குப் பின் ராஜேஷ் அறிமுகமானார். எனக்காக கிறிஸ்தவராக மதம் மாறினார். என்னை தாங்கினார். நான் உருகினேன். திருமணம் நடந்தது. என் மகனும் பிறந்தான். ஆனால் அவருடைய குடும்பத்தினர் வாயிலாக பிரச்சினை வந்தது.
மிகுந்த சண்டைகளுக்குப் பின் பிரிந்தோம். என் வாழ்க்கையில் என்னை நேசித்தது இரண்டே ஆண்கள் தான். ஒன்று எனது அப்பா, இரண்டாவது எனது மகன். இனி என் வாழ்க்கையில் எந்த ஆணுக்கும் இடமில்லை. எனக்குத் தேவையும் இல்லை. என்னைப் பொருத்தவரை செக்ஸ் ஒரு எமோஷன். அது இரு மனங்கள் சார்ந்தது. அடிப்படைத் தேவையில்லை. ஆனால் அதைப் புரிந்து கொள்ள எனக்கு இத்தனை காலம் ஆகியிருக்கிறது.
அதுபோல் க்ளாமர் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. சிலர் ஸ்விம் சூட்டில் வந்தாலும் அழகாக இருக்கமாட்டார்கள். சிலர் புடவையிலும் கிளாமராகத் தெரிவார்கள்.
ஷகிலா நீ எனது நல்ல தோழி. எனக்குத் தெரிந்து நீ ஒரு ஏஞ்சல். உன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மறுக்காமல் செய்வாய். நான் என் பாய் ஃப்ரெண்ட்ஸிடம் பணத்தை இழந்தேன். நீ தானமாக கொடுத்து சேவையாக செய்கிறாய். நீ எப்படி இதை செய்கிறாய் என நான் யோசித்தது உண்டு. ஆனால் நீயே சொல்கிறாய் ஏதோ போன ஜென்ம கடனைக் கழிக்க கடவுள் கொடுத்த வாய்ப்பு என்று. இந்த விஷயம் தான் எனக்கு உன்னிடம் ரொம்பப் பிடித்தது.
இவ்வாறு சார்மி கூறியுள்ளார்.