பொதுவாக குழந்தைகள் செய்யும் அத்தனை செயல்களும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். அந்த வகையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் தளத்தில் இரண்டு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனமான வீடியோ ஒன்று Charlie Bit My Finger என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் அண்ணன் ஹாரி, தம்பி சார்லியின் வாயில் தன் விரலை வைத்து விளையாடி வருகையில், சார்லி நறுக்கென்று அண்ணன் விரலைக் கடிக்கிறார். உடனடியாக கையை எடுத்துக்கொள்ளும் ஹாரி, மீண்டும் தன்னுடைய தம்பியின் வாயில் கையை வைக்கிறார்.
சுட்டிக் குழந்தையான சார்லி, தற்போது நறுக்கென்று முன்பைவிட வேகமாக கடித்து விடுகிறார். வலியினை பொறுக்க முடியாமல் அண்ணன் Charlie Bit My Finger என்ற மழலை மொழியில் கூறுகிறார். ஆனால் தம்பி சார்லியோ விரலினைக் கடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பார்.
யூடியூபில் இந்த வீடியோவினை பார்த்த யாவரும் நிச்சயம் ரசிக்காமல் இருக்கமுடியாது என்றே கூறலாம். அப்படித்தான் அனைவரையும் கவர்ந்த இந்த இரு சுட்டிக் குழந்தைகளின் வீடியோ யூடியூப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இணைய வரலாற்றில் சாதனையாக சுமார் 880 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இணையவாசிகளால் அதிகமாக பார்க்க மற்றும் பகிரப்பட்ட இந்த இரு சுட்டிக்குழந்தைகளின் வீடியோ, தற்போது உலகில் உள்ள கலைப்பொருள்களுக்கு டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படும் non-fungible token எனப்படும் NFT ஏலத்தில் விடப்படவுள்ளது.
இந்த வீடியோ தற்போது 5.5 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த வீடியோ தற்பொழுது யூடியூப் தளத்திலிருந்து மே 23-ஆம் தேதி முதல் நீக்கம் செய்யப்படுவதாக இருந்தது, ஆனால் தற்போதும் இணையத்தில் இந்த வீடியோ உள்ளது.
குறிப்பாக NFT ஏலத்தில் எடுக்கப்பட ஆடியோ, வீடியோ, புகைப்படம், மீம்ஸ் என அனைத்து பிரிவுகளிலும் இந்த டோக்கன் கொடுக்கப்படுகிறது. மேலும் தற்பொழுது ஏலத்தில் எடுக்கப்படவுள்ள Charlie Bit My Finger வீடியோவின் உரிமையை NFT (non-fungible token) ஏலத்தின் மூலம் ஒருவர் வாங்கிக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இந்த என்.எப்.டி (NFT) உரிமைகோரும் நடைமுறை மேற்கத்திய நாடுகளில்தான் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கிரிப்டோகரன்சியை (cryptocurrency ) பயன்படுத்தி மட்டுமே இந்த ஏலத்தில் பங்குபெற முடியும் என்பதால், இந்தியாவில் இந்த முறை வருவதற்கு சாத்தியமில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால், கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.