நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சந்திரமுகி 2 படத்தை தயாரித்து வருகிறது. பி.வாசு இயக்கியுள்ள இந்த படத்தில் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ராதிகா என நட்சத்திர பட்டாளமே சந்திரமுகி படத்தில் இணைந்துள்ளது. மரகதமணி இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம், 2005 ஆம் ஆண்டு வெளியான அதன் முதல் பாகம் போல ரசிகர்களை கவருமா என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் எழுந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள வேட்டையன் ராஜா கேரக்டரின் தோற்றம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. தொடர்ந்து கங்கனா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தோற்றமும் அறிமுகம் செய்யப்பட்டது. இப்படியான நிலையில், சந்திரமுகி படத்தில் இருந்து “ஸ்வாகதாஞ்சலி” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடலை சைதன்யா பிரசாத் எழுதியுள்ளார். சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்ற தெலுங்கு மொழி பாடலான “ரா ரா” பாடலைப் போல, 2ஆம் பாகத்தில் இந்த பாடல் அமைய உள்ளது. இதில் கங்கனா ரணாவத் நாட்டிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை கேட்கும் போது பழைய சந்திரமுகியின் நினைவுகள் வந்து செல்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.